நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் நாடு முழுவதும் 2.8 கோடி வழக்குகள் நிலுவை

நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் நாடு முழுவதும் 2.8 கோடி வழக்குகள் நிலுவை
Updated on
1 min read

நாடு முழுவதும் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதால் மாவட்ட நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 2.8 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண காலியாக உளஅள நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் 2 அறிக்கைகளில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

‘இந்திய நீதித் துறை ஆண்டறிக்கை 2015-16’ மற்றும் ‘இந்திய கீழமை நீதிமன்றங்கள்: நீதியை அணுகுதல் மீதான அறிக்கை (2016)’ என 2 அறிக்கைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில், 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 2016-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரையிலான காலத்தில் 2,81,25,066 சிவில் மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதே காலத்தில் 1,89,04,222 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டன.

அதேநேரம், மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் உள்ள 21,324 நீதிபதி பணியிடங்களில் 4,954 இடங்கள் காலியாக உள்ளன. கீழமை நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கு இதுவே காரணம். இப்போதுள்ள நீதிபதிகள் எண்ணிக்கையைக் கொண்டு புதிதாக தாக்கலாகும் வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காண முடியும். இந்த நிலை நீடித்தால் நிலுவை வழக்குகள் அப்படியேதான் இருக்கும். இது கவலை அளிப்பதாக உள்ளது.

எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமானால், காலியாக உள்ள நீதிபதி மற்றும் நீதித் துறை அதிகாரிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித் துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், மத்திய அரசின் செயல்பாட்டை குறை கூறும் வகையில் இந்த அறிக்கைகள் வெளியாகி உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in