கேரள கோயில் தீ விபத்து: முக்கிய தகவல்கள்

கேரள கோயில் தீ விபத்து: முக்கிய தகவல்கள்
Updated on
1 min read

கேரளாவில் கோயில் திருவிழாவின்போது, தடையை மீறி இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பட்டாசு வெடித்தனர்.

அப்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 110 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 400-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். -

மத்திய குழு ஆலோசனை:

கேரளாவில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக, பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் பாதுகாப்பு நிறுவனத்தின் (பிஇஎஸ்ஓ) தலைமை அதிகாரி தலைமையிலான குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

பிரதமர் நேரில் ஆறுதல்:

கேரளாவில் பட்டாசு வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்ட கோயில் வளாகத்தை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கொல்லம் வெடி விபத்து: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

விபத்து குறித்து கொல்லம் மாவட்ட ஆட்சியர் ஏ.ஷைனமோல் கூறும்போது, "திருவிழாவின்போது போட்டி போட்டுக் கொண்டு பட்டாசு வெடிக்க கோயில் நிர்வாகத்தினர் அனுமதி கோரினர். ஆனால் எந்தவிதமான பட்டாசும் வெடிக்க அனுமதி வழங்கப்படவில்லை" என்றார்.

பாகிஸ்தான் இரங்கல்:

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள கோயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் அரசு சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.

பட்டாசு வெடிக்க தடை கோரி வழக்கு:

கொல்லம் தீ விபத்தைத் தொடர்ந்து கோயில் திருவிழாக்கள், கட்சிகளின் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இந்திய மருத்துவ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in