

பஞ்சாப் மாநிலத்துக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப் பாளர் பதவிக்கு, கட்சியின் செய லாளர் ஆஷா குமாரி நியமிக் கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
இதற்கு முன் இப்பதவியில் இருந்த, கட்சியின் மூத்த தலை வர் கமல்நாத், 1984-ல் சீக்கியர் களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக தன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதை அடுத்து, பதவி விலகினார். இதைத்தொடர்ந்து அப்பதவிக்கு, கட்சியின் செயலாளர் ஆஷா குமாரியை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலம், டல்ஹவுசி தொகுதி எம்எல்ஏவான ஆஷா குமாரி, கடந்த ஐமு கூட்டணி ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாலும், கமல்நாத் அளவுக்கு செல்வாக்கு பெற்றவர் அல்ல. அதுமட்டுமின்றி, நில அபகரிப்பு வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு, சம்பா நீதிமன்றத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் ஆஷா குமாரி.
எனினும், இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதத்தில் தண்டனையை நிறுத்தி வைத்தது. தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அவரை மாநில பொறுப்பாளராக நியமித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘காங்கிரஸில் நல்ல தலைவர்கள் இல்லை என்பதை அவர்களே உறுதிபடுத்துகின்றனர்’ என, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்யத்தொடங்கியுள்ளன.
அடுத்தாண்டு பஞ்சாபில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய சர்ச் சைக்கு வித்திட்டுள்ளதாக மாநில காங்கிரஸார் அதிருப்தியில் உள்ளனர்.