Published : 15 Feb 2017 10:29 AM
Last Updated : 15 Feb 2017 10:29 AM

புதிய உலக சாதனை நிகழ்த்தியது இஸ்ரோ: 104 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி.- சி37

பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள் களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது ‘இஸ்ரோ’. இதுவரை அதிகபட்சம் 37 செயற் கைக்கோள்களை ரஷ்யா ஏவியதுதான் உலக சாதனையாக இருந்து வந்தது.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் விண்வெளி ஆய்வுத் துறையில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், செயற் கைக்கோள்களையும், அவற்றை விண்ணில் செலுத்த உதவும் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரகராக்கெட்களையும் தயாரித்து வருகிறது. உள்நாட்டு செயற்கை கோள்களுடன் வெளி நாடுகளின் செயற்கைக்கோள் களையும் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், சாதனைகளுக்கு மணிமகுடம் சூட்டுவது போல் ஒரே நேரத்தில் 104 செயற் கைக்கோள்களை விண்ணில் செலுத்த ‘இஸ்ரோ’ முடிவு செய்தது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்டோசாட்-2 செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-1-ஏ, ஐஎன்எஸ்-1-பி என்ற 2 நானோ செயற்கைக்கோள்கள், தலா ஒன்று வீதம் இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் 5 நானோ செயற்கைக்கோள்கள், அமெரிக்காவுக்குச் சொந்தமான 96 நானோ செயற்கைக்கோள்கள் என 104 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் மூலம் அந்த 104 செயற்கைக்கோள்களும் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை சரியாக 9.28 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன. 104 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு நெருப்பு பிழம்பை கக்கியவாறு பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தபோது இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ராக்கெட் ஏவப்பட்ட 31 நிமிடங்களில் முதலில் கார்டோசாட்-2 செயற்கைக்கோளும் அதைத் தொடர்ந்து ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி நானோ செயற்கைக்கோள்களும், அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளி யில் எஞ்சிய 101 நானோ செயற்கைக் கோள்களும் ராக்கெட்டிலிருந்து பிரிக்கப் பட்டு புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. அதாவது பூமியில் இருந்து 524 கி.மீ. தூரத்தில் இந்த செயற்கைக் கோள்கள் புவி சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்பட்டுள்ளன.

நிர்ணயிக்கப்பட்ட 28 நிமிடங்களில் அனைத்து செயற்கைக்கோள்களும் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட காட்சி களை ராக்கெட் கட்டுப்பாட்டு அறை யில் இருந்து பார்த்துக் கொண்டி ருந்த இஸ்ரோ தலைவர் கிரண்குமார் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனை வரும் ஒருவரையொருவர் ஆரத் தழுவி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இதற்கு முன்பு ‘இஸ்ரோ’ ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 20 செயற் கைக்கோள்களை விண்ணில் செலுத்தி யிருக்கிறது. இதுவரை ஒரேநேரத்தில் அதிகபட்சம் 37 செயற்கைக்கோள்களை ரஷ்யா ஏவியதுதான் உலக சாதனையாக இருந்து வந்தது. தற்போது 104 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம் ரஷ்யாவின் சாத னையை முறியடித்து இந்தியா புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்த இஸ்ரோவுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரணாப் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், “பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக உங்களுக்கும் உங்கள் தலைமையிலான குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்த நாள் நம் நாட்டுக்கும், நமது விண்வெளி அறிவியல் சமுதாயத்துக்கும் மேலும் ஒரு பெருமையான தருணம் ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x