

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்களால் தாயும் மகளும் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ், சமாஜ்வாதி உறுப்பினர்கள் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவை இன்று (புதன்கிழமை) காலை கூடியவுடன் பூஜ்ய நேரத்தின்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி புலந்த்சாஹர் பலாத்கார சம்பவம் குறித்து பேச அனுமதி கோரினார்.
அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ரஜினி படீல், "நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பலாத்கார சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து எனவே உ.பி. சம்பவத்தைப் பற்றி அவசரமாக விவாதிக்க வேண்டியிருக்கிறது" என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜெயா பச்சன், "உத்தரப்பிரதேச சம்பவம் மட்டுமல்லாது நாட்டில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறேன். உ.பி. சம்பவத்தைப் பற்றி காங்கிரஸ் பேசுவது முதலைக் கண்ணீர் வடிப்பது போன்றது. ஏற்கெனவே இது தொடராக அவையில் நோட்டீஸ் அளித்து எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விவாதத்தில் அரசியலுக்கு இடமில்லை. எனவே அவைத் தலைவர் அனுமதிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த அம்பிகா சோனி, "உ.பி. சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பது அந்த மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான ஜெயா பச்சன் தான்" என்றார்.
இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அப்போது குறுக்கிட்ட பாஜக அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அவையில் விவாதிக்க தயாராக இருக்கிறோம். உ.பி.யில் மட்டுமல்ல நாட்டில் எந்தப் பகுதியில் பெண்களுக்கு எதிராக அநீதி நடந்தாலும் அது கண்டனத்துக்குரியதே. புலந்த்சாஹர் சம்பவத்தைப் பொருத்தவரை உ.பி. அரசு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்" என்றார்.
இதனைத் தொடர்ந்து அவையின் துணைத் தலைவர் குரியன், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விவாதிக்கக் கோரும் உறுப்பினர்கள் முறைப்படி நோட்டீஸ் அளிக்கலாம் என்றார். அதனடிப்படையில் பிரச்சினை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.