கர்நாடகாவில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக குடியரசுத் தலைவரின் வாகனத்தை நிறுத்திய டிராபிக் போலீஸ்

கர்நாடகாவில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக குடியரசுத் தலைவரின் வாகனத்தை நிறுத்திய டிராபிக் போலீஸ்
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி க‌டந்த 17-ம் தேதி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பெங்களூரு வந்தார். அப்போது அம்பேத்கர் வீதியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர் பாதுகாப்பு வாகனத்தில் ராஜ்பவன் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பிர‌ணாப்பின் பாதுகாப்பு வாகனங்கள் டிரினிட்டி சதுக்கம் அருகே வந்த போது, எதிர் திசையில் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறியது.

இதைப் பார்த்த டிரினிட்டி சதுக்க போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் நிஜலிங்கப்பா பிர‌ணாப் முகர்ஜியின் பாதுகாப்பு வாகனங்களைத் திடீரென நிறுத்தி னார். உடனடியாக ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் செல்லும் வகையில் வழி ஏற்படுத்திக் கொடுத்து, போக்குவரத்தைச் சீர் செய்தார். இதையடுத்து 3 நிமிடங் களில் ஆம்புலன்ஸ் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வாகனங்களைக் கடந்து மருத்துவ மனைக்கு சென்றது.

நோயாளியின் உயிரைக் காக்கும் பொருட்டு, குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வாகனங்களை நிறுத்திய நிஜலிங்கப்பாவுக்கு வாகன ஓட்டிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் பலர் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், நிஜலிங்கப்பாவின் கடமை உணர்ச் சியைப் பாராட்டி வாழ்த்தினர். இந்தச் செய்தி வைரலாகப் பரவியதால் நிஜலிங்கப்பாவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இதையறிந்த கர்நாடக காவல் துறை அதிகாரிகள் நிஜலிங்கப்பா வுக்கு பாராட்டுக்களைத் தெரிவித் துள்ளனர். பெங்களூரு (கிழக்கு) போக்குவரத்து காவல் ஆணையர் அபிஷேக் கோயல் நிஜலிங்கப்பா வுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இதுபற்றி அபிஷேக் கோயல் கூறுகையில், 'ஒரு நோயாளியின் உயிரைக் காக்கும் பொருட்டு குடியரசுத்தலைவரின் வாகனத்தை நிறுத்தி, ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட போலீஸ் அதிகாரியை வணங்கு கிறேன். நிஜலிங்கப்பாவின் கடமை உணர்ச்சியும், மனித நேயமும் ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in