

2ஜி வழக்கில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தலையிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது வழங்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி 2010-ம் ஆண்டில் சுட்டிக் காட்டினார். இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பலர், சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தனியாகப் சந்தித்துப் பேசியதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக சி.பி.ஐ.எல். என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு ஆதாரமாக ரஞ்சித் சின்ஹா வீட்டில் சி.ஆர்.பி.எப். போலீஸாரால் பராமரிக்கப்படும் பார்வையாளர் வருகைப் பதிவேடு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் மதன் பி. லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை எனத் தெரிகிறது. இதுதொடர்பான முழுமையான விவரங்களை வெளியிட விரும்பவில்லை. இதனால் சிபிஐ அமைப்பின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படக்கூடும்.
இனிமேல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் ரஞ்சித் சின்ஹா தலையிடக்கூடாது. அவருக்கு அடுத்த நிலையில் உள்ள சிபிஐ மூத்த அதிகாரி மேற்பார்வையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ரஞ்சித் சின்ஹா வீட்டின் வருகைப் பதிவேட்டை அளித்தவரின் பெயரை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று சி.பி.ஐ.எல். தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு நீதிபதிகள் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர். அந்த உத்தரவை நீதிபதிகள் நேற்று வாபஸ் பெற்றனர்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது சிபிஐ அதிகாரிகள் பலர் நீதிமன்றத்தில் குழுமியிருந்தனர். அவர்களை கடுமையாகக் கடிந்து கொண்ட நீதிபதிகள், அவரவர் அலுவலகத்துக்குச் சென்று பணிகளை கவனிக்குமாறு உத்தரவிட்டனர்.
டிசம்பர் 2-ல் ஓய்வு
சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா வரும் டிசம்பர் 2-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவர் பதவியிலிருந்து விலக இன்னும் 12 நாள்கள் மட்டும் உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.