Last Updated : 20 Jan, 2017 11:10 AM

 

Published : 20 Jan 2017 11:10 AM
Last Updated : 20 Jan 2017 11:10 AM

மதுராவில் 16-வது முறையாக போட்டியிடும் சாது: மக்களவை தேர்தலில் ஹேமமாலினியை எதிர்த்தவர்

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரா மாவட்டத்தின் பிருந்தா வன் தொகுதியில் சாது ஒருவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மதுரா மாவட்டத்தில் தற்போது 16-வது முறையாக போட்டியிடும் இவர், கடந்த மக்களவைத் தேர்தலில் நடிகை ஹேம மாலினியையும் எதிர்த்து போட்டியிட்டார்.

உ.பி.யில் முதல்கட்ட தேர்தல் வரும் பிப்ரவரி 11-ல் நடைபெற உள்ளது. மேற்கு உ.பி.யின் 73 தொகுதிகளில் நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் முதல் நாளில் மதுரா மாவட்டத்தின் பிருந்தாவன் தொகுதியில் ஒரேயொரு வேட்பாளராக பக்கட் பாபா (73) என்ற சாது, வேட்பு மனு தாக்கல் செய்தார். தெய்வீக நகரமான மதுராவில் இவர் பசுக்களைப் பராமரிக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார். கடந்த 1973 முதல் மதுராவின் தொகுதிகளில் ஒவ்வொரு தேர்தலிலும் மனு தாக்கல் செய்து வருகிறார். இது அவரது 16-வது தேர்தல் எனக் கூறப்படுகிறது. இதற்கு முன் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மதுராவில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹேமமாலினியை எதிர்த்தும் பக்கட் பாபா போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்துக்காக ரூ.84 ஆயிரம் செலவிட்டார். இதில் அவர் தோல்வி அடைந்ததுடன் முன்வைப்புத் தொகையையும் பறிகொடுத்தார். என்றாலும் மனம் தளராமல் மீண்டும் மனு தாக்கலை தொடங்கிவிட்டார் பக்கட் பாபா. தொடர்ந்து சுயேச்சையாக போட்டியிடும் இவர், பாஜக உட்பட வேறு எந்தக் கட்சியிலும் சேர விரும்பியதில்லை.

இது குறித்து ‘தி இந்து’விடம் பக்கட் பாபா கூறும்போது, “மதுராவுக்கு தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகிறார் கள். ஆனால், இங்கு குடிநீர் கூட சுத்தமாகக் கிடைப்பதில்லை. பசுபாலகன் கிருஷ்ணன் பிறந்த பூமியான இங்கு பசுக்களைப் பராமரிக்க போதுமான வசதிகளை எந்த அரசும் செய்யவில்லை. இதற்காக எந்த கட்சியையும் நம்பாமல் நான் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன். எனது 20-வது போட்டியில் வெற்றி கிடைக்கும் என எனது குரு மஹராஜ் கனவில் வந்து கூறியதால் தொடர்ந்து போட்டியிடுகிறேன்” என்றார்.

இதே மாநிலத்தின் கான்பூரைச் சேர்ந்த பக்கட் பாபா தனது 11-வது வயதில் சாதுவாகி மதுரா வந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஜெகந்நாத் புரியின் சங்கராச்சாரியர் பக்தரான இவர், பசுக்கள் பராமரிப்பில் ஈடுபட்டு வருவதுடன் இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். பக்கட் பாபாவுக்கு தங்குவதற்கு வீடு இல்லை. எனவே பசு பராமரிப்புக் கூடங்கள் அல்லது கோயில் வாயிலில் இரவுப் பொழுதை கழிக்கிறார். மதுரா வரும் பக்தர்கள் அவரது பசுப் பராமரிப்பு பணியைப் பாராட்டி காணிக்கை அளிப்பதுண்டு. இதில் பசுக்களுக்காக செலவிட்டது போக, எஞ்சிய பணத்தை தேர்தல் செலவுக்காக பயன்படுத்திக் கொள்கிறார் பக்கட் பாபா.

ஒவ்வொரு முறையும் வேட்பு மனு தாக்கல் செய்யும் முன், மதுரா கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு பூஜை செய்வதுடன் வேதங்களும் ஓதுகிறார் பக்கட் பாபா. தோல்வி பெறுவோம் என நன்கறிந்தும் வேட்பு மனு தாக்கல் செய்வதால் இவரை ‘பாகல் பாபா (பைத்தியக்கார பாபா)’ என மதுராவாசிகள் கேலி பேசுவதும் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x