

அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு ஆதரவளிக்குமாறு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை’ (எஸ்சிஓ) உருவாக்கின. இந்த அமைப்பில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் நிரந்தர உறுப்பினராக சேர்த்துக் கொள்ள கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது.
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் எஸ்ஜிஓ-வில் முறைப்படி சேர்க்கப்பட உள்ளன. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தாஷ்கண்ட் சென்றடைந்தார்.
இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி தனியாக சந்தித்துப் பேசினார். என்எஸ்ஜியில் இந்தியாவை உறுப்பினராக சேர்க்க சீனா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த இரு தலைவர்களின் சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடித்தது.
இந்த சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, “இரு தலைவர்களும் என்எஸ்ஜி விவகாரம் குறித்து விரிவாக விவாதித்தனர். குறிப்பாக, என்எஸ்ஜியில் உறுப்பினராக சேர்க்கக் கோரி இந்தியா விண்ணப்பித்துள்ளது. இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சியோலில் நடைபெறும் என்எஸ்ஜி உறுப்பு நாடுகள் கூட்டத்தில் இதுபற்றி பரிசீலிக்கும்போது சீனாவும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்” என்றார்.
இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா என்ன பதில் கூறியது என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்வரூப், “இது மிகவும் சிக்கலான மற்றும் நுட்பமான நடைமுறை என்பதை அறிவீர்கள். சியோலில் இருந்து எத்தகைய செய்தி வருகிறது என்பதைக் காண ஆவலுடன் உள்ளோம். இதற்கு மேல் எதுவும் கூற இயலாது” என்றார்.
மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைனும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது, என்எஸ்ஜி விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததற்காக சீனாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
என்எஸ்ஜியில் புதிய உறுப்பினராக சேர இந்தியாவும் பாகிஸ்தானும் விண்ணப்பித்துள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
எனினும், இந்தியா போன்ற அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை சேர்க்க சீனா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேநேரம் இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளித்து உறுப்பினராக சேர்த்தால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையில், என்எஸ்ஜியின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் வருடாந்திர கூட்டம் சியோல் நகரில் நேற்று தொடங்கியது. இதில் புதிய நாடுகளை சேர்ப்பது குறித்து முறைப்படி பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்எஸ்ஜி வருடாந்திர கூட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காகவும் நிலைமையை கண்காணிப்பதற்காகவும் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் சியோலில் முகாமிட்டுள்ளனர். எனினும் இவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது.