

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவின் காலவரையற்ற போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தியும், வங்கமொழி திணிப்பை எதிர்த்தும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மேற்குவங்க மாநிலத் தின் டார்ஜிலிங் மலைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. 7-வது நாளாக நேற்றும் நடந்த முழு அடைப்புப் போராட்டத்தால் மருந்து கடைகளைத் தவிர, மற்ற கடைகளும், உணவு விடுதிகளும் மூடப்பட்டிருந்தன. இணைய சேவைகளும் முடக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப் பட்டது.
இதற்கிடையே நேற்று முன்தினம் ஜிஜேஎம் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அதில் பாதுகாப்புப் படையினரை அரசு வாபஸ் பெறும் வரை முழு அடைப்பு போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக மேற்குவங்க அரசு இன்று அழைப்பு விடுத்திருந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பங்கேற்கக் கூடாது என்ற முடிவும் எடுக்கப்பட்டது.
இதுகுறித்து ஜிஜேஎம் செய்தித்தொடர்பாளர் டி.அர்ஜூன் கூறும்போது, ‘‘தனி கூர்க்காலாந்து கோரிக்கையை பிரதமரிடமும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் வலியுறுத்தும் வகை யில் அனைத்து கட்சி ஒருங் கிணைப்பு குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம். இக்குழு பிரதிநிதிகள் விரைவில் டெல்லி சென்று பிரதமரையும், ராஜ்நாத் சிங்கையும் சந்திப்பார்கள்’’ என்றார்.