2ஜி பேரம் கருணாநிதிக்கு தெரியும்- செல்போன் உரையாடல் பதிவுகளை வெளியிட்டது ஆம் ஆத்மி

2ஜி பேரம் கருணாநிதிக்கு தெரியும்- செல்போன் உரையாடல் பதிவுகளை வெளியிட்டது ஆம் ஆத்மி
Updated on
1 min read

2ஜி ஊழலில் நடந்த முழுபேரமும் திமுக தலைவர் கருணாநிதிக்கு தெரியும் என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியள்ளது. அதற்கு ஆதாரமாக செல்போன் உரையாடல் பதிவுகளையும் அந்தக் கட்சி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் டெல்லியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க் கிழமை பேட்டியளித்தார்.

அப்போது அவர், செல்போனில் பதிவான நான்கு உரையாடல்களின் பதிவுகளை வெளியிட்டார். மேலும் கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருந்த சமூகநல அமைப்பின் வரவு செலவு ஆண்டறிக்கை மற்றும் கருணாநிதிக்கு ரத்தன் டாடா எழுதிய கடிதத்தின் நகல் ஆகியவற்றையும் வெளியிட்டார்.

இவை தொடர்பாக அவர் கூறியதாவது: திமுக ஆட்சியில் பணியாற்றிய உளவுத் துறை அதிகாரி ஜாபர்சேட்டுடன் கனிமொழி, கருணாநிதியின் உதவியாளரான சண்முகநாதன், கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோர் செல்போனில் பேசிய உரையாடல்கள் மற்றும் அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி பேசிய செல்போன் உரையாடல்களை இப்போது வெளியிட்டுள்ளோம்.

கனிமொழிக்கு எதிரான ஆதாரம்

இவை முதன்முறையாக வெளியிடப்படும் தொலைபேசி உரையாடல்கள். இதில், 2008-ல் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது தனியார் நிறுவனத்துக்கு 2ஜி அனுமதி பெற்றுத் தந்ததில் கனிமொழி ஆதாயம் அடைந்ததற்கான ஆதாரம் உள்ளது. இவரைக் காப்பாற்று வதற்காகத்தான் பெரும் முயற்சி செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் டிவிக்கு பெருந்தொகை கடன் வாங்கப் பட்டது என்பது பொய்யானது. இந்த ஊழல் வெளியான பின்னர், கடன் வாங்கியதாக சரத்குமார் ரெட்டியால் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இது ஜாபர்சேட் மற்றும் சரத்குமாருக்கு இடையே நடந்த உரையாடல் பதிவில் தெரியவருகிறது.

இதில் ஆதாயம் அடைந்த டாடா நிறுவனம் சார்பில் கனிமொழிக்கு மிகவும் வேண்டப்பட்டவருக்கு லஞ்சம் தரப்பட்டது.

சண்முகநாதன் மற்றும் ஜாபர்சேட்டுக்கு இடையே நடந்த உரையாடலை வைத்து இந்த முழு பேரமும் கருணாநிதிக்கும் தெரியும் என்பது தெளிவாகிறது.

நம்பகமான இடத்தில் இருந்து இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளோம். கருணாநிதி முதல்வராக இருந்த நவம்பர் 2010 மற்றும் பிப்ரவரி 2011-ம் ஆண்டுகளில் இந்தப் பதிவுகள் அனைத்தும் செல் போனில் பதிவு செய்யப்பட்டுள் ளது. அந்த செல்போன் ஜாபர் சேட்டினுடையதாக இருக்கலாம். இதன் மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த ஆதாரங்களை சிபிஐ அல்லது லோக்பால் போன்ற பொது அமைப்புகளும் விசாரிக்கலாம் என்றார்.

சிபிஐ விசாரணை

சிபிஐ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: 2ஜி ஊழல் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழி, தமிழக போலீஸ் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இப்போது வெளியிடப்பட்டுள்ள செல்போன் உரையாடல் பதிவுகளின் உண்மைதன்மை குறித்து ஆய்வு செய்வோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in