

சாதாரண மக்களின் பங்களிப்புடன் தேர்தலை சந்திப்பது என்ற பாடத்தை, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து கற்றுக்கொள்வோம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ராகுல் காந்தி பேசும்போது, "இந்தத் தேர்தல் மூலம் மக்கள் எங்களுக்கு புதிய தகவலை கூறியுள்ளனர். அதனை நாங்கள் அறிந்துகொண்டோம்.
சாதாரண மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி மக்கள் பலரையும் ஈடுபடுத்தியது. அவர்களிடம் இருந்து அதை நாங்கள் கற்றுக்கொள்வோம். காங்கிரஸும், பாஜகவும் காலம் காலமாக தங்கள் வழக்கப்படி தேர்தலை சந்தித்தன. புதிய கட்சி பெருமளவு மக்கள் பங்களிப்புடன் செயல்பட்டது.
மக்களுக்கு அதிகாரமளிப்பது குறித்து நான் கட்சியில் பேசி வருகிறேன். இதுகுறித்து நாங்கள் ஆராயவேண்டியுள்ளது. இதனை நான் மையப் பொருளாக மாற்றுவேன். பெருமளவு மக்களை பங்களிப்புடன் நீங்கள் கற்பனை செய்திருக்காத வகையில் நாங்கள் செயல்படுவோம்" என்றார் ராகுல் காந்தி.