

தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? என மாநிலங்களவை யில் திமுக அவைத்தலைவர் கனிமொழி கேள்வி எழுப்பினார். தமிழக மீனவர் பிரச்சினையை அவையில் விவாதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்
மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் கனிமொழி பேசியதாவது:
மீனவர் பிரச்சினையை விவா திக்க கேட்டமைக்கு அனுமதி மறுக் கப்பட்டுள்ளது. நம் மீனவர் களுக்கு நாம் தரும் மரியாதை இதுதானா? தொடர்ந்து அவர் கள் சித்திரவதைக்குள்ளாகி வரு கின்றனர், சுடப்படுகின்றனர். இதில் மீனவர்கள் பலர் உயிரிழந் துள்ளனர். இந்த பிரச்சினை அவையில் விவாதிக்கப்பட வேண்டும். இதில் ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களும் தங்கள் கருத்துகளைக் கூற வேண்டும். இதற்கு தொடர்புடைய மூன்று மத்திய அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும்.
மீனவர்களின் பிரச்சினை பற்றி பேச மூன்று நிமிட அவகாசம் போதாது. மீனவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதிலும் போராட்டம் எழுந்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றால் உயிருடன் திரும்புவது உறுதியில்லை. சமீபத்தில் 21 வயது இளைஞர் பிரிட்ஜோ சுடப்பட்டுள்ளார். ஒரே மகனான இவரை இழந்து அவரது குடும்பம் தவிக்கிறது. இதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது என இலங்கை அரசு கைவிரித்துள்ளது. இவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாது எனில் யார் எடுப்பது?
தமிழக மீனவர்கள் எல்லையை கடந்தால் அவர்கள் சுடப்படுவார்கள் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஏற்கெனவே கூறியுள்ளார். அது இப்போது நடந்துள்ளது. இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு எந்த கவனமும் செலுத்தாமல் இருப்பது ஏன்? தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? சில வருடங்களுக்கு முன் இதுபோன்ற மீனவர் பிரச்சினையில் நமது தற்போதைய பிரதமர் பேசினார். அப்போது அவர், “மத்திய அரசு பலவீனமாக உள்ளது. எனவே தான் இவ்வாறு நிகழ்கிறது” என்றார். இப்போது மத்திய அரசு பலமாக இருந்தும் மீனவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? அவர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா?
இவ்வாறு கனிமொழி பேசினார்.
இதனிடையே, மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், “மீனவர் பிரச்சினை பற்றி பேச நோட்டீஸ் அளித்தீர்களா?” என கனிமொழியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு, ‘ஆம்’ என்று கனிமொழி கூறவே, மற்றொரு நோட்டீஸ் அளித்தால் விவாதத்திற்கு அனுமதி அளிப்பதாக குரியன் தெரிவித்தார். இதனால், தமிழக மீனவர் பிரச்சினை மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை விவாதிக்கப் படும் என தெரிகிறது.
இந்தப் பிரச்சினையில் அதிமுக உறுப்பினர்களும் சேர விரும்புவதாக துணைத் தலைவரிடம் விருப்பம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிமுகவின் மூத்த உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியமும் தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பேசினார். இதில் அவரும் மத்திய அரசு பலவீனமாக இருப்பதாக முன்பு நரேந்திர மோடி கூறியதை நினைவுபடுத்தினார்.