Last Updated : 20 Jan, 2016 08:15 AM

 

Published : 20 Jan 2016 08:15 AM
Last Updated : 20 Jan 2016 08:15 AM

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இறுதி வாதத்தின் போது முன் வைக்கவுள்ள முக்கிய அம்சங்கள் அடங்கிய பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு நேற்று தாக்கல் செய்தது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் த‌ரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட‌து. இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பிலும், தனியார் நிறுவனங்கள் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராவ் அடங்கிய அமர்வு, ''இவ்வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு, அன்பழகன், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பில் இருந்தும் இறுதிவாதத்தின் போது முன் வைக்கவுள்ள முக்கிய‌ அம்சங்கள் அடங்கிய தொகுப்பை வரும் பிப்ரவரி 2-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்''என உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில் இறுதிவாதத்தில் இடம்பெறவுள்ள அம்சங்கள் அடங்கிய பதில் மனு, நேற்று கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி அளித்த தீர்ப்பில் கூட்டுப்பிழை இருப்பதாகவும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் வருமானத்தை மதிப்பிட்டதில் நேர்ந்த தவறு உள்ளிட்ட அம்சங்களை சுட்டிக் காட்டி இறுதிவாதத்தை முன்வைக்கப் போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திமுக தரப்பிலும் விரைவில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

இதற்கிடையில் கர்நாடக அரசும், திமுகவும் பதில் மனுவை தாக்கல் செய்த பிறகே ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது இறுதிவாதம் தொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x