

ஜம்மு காஷ்மீரில் கனமழைக்கு 4 பேர் பலியாகினர். மேலும் 5 பேரை காணவில்லை.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பருவம் தவறிய பனிப்பொழிவும் இடைவிடாத மழையும் காணப்படுகிறது. ஜீலம் நதியில் நேற்று காலை இரு இடங்களில் வெள்ளம் அபாய அளவுக்கு மேல் சென்றது.
இந்நிலையில் லடாக் பிராந்தியத்தின் கார்கில் மாவட்டத்தில் பனிப்பாறை சரிந்து தந்தையும் மகனும் உயிரிழந் தனர். ஜம்மு பிராந்தியத்தின் ரஜவுரி மாவட்டத்தில் மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தார். வடக்கு காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில் 10 வயது சிறுமி நீரோடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார்.
நிலச்சரிவு காரணமாக ஜம்மு நகர் தேசிய நெடுஞ்சாலை நேற்று 3-வது நாளாக மூடப்பட்டது. நகரில் பல இடங்களில் நேற்று சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே லடாக் பிராந்தியத்தின் படாலிக் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பனிச்சரிவில் ஒரு ராணுவச் சாவடி புதையுண்டது. இதில் 5 வீரர்கள் பனியில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து நடந்த மீட்புப் பணியில் இருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மற்ற 3 பேர் சடலமாக மீட்கப் பட்டனர்.