

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 12-ம் தேதி தொடங்கி ஒரு மாதத்துக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முன்பு, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை கூட்டுவதற்கான தேதி தொடர்பாக பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதில் இடம்பெற்றுள்ள ஒரு திட்டத்தின்படி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 12-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனினும், மத்திய அமைச்சரவைக் குழு வரும் 20-ம் தேதிக்குப் பிறகு கூடி இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாத இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு குடியரசு மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதால், சற்று முன்னதாகவே இந்த கூட்டத் தொடரை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.