

பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி என்றும், தனது பிரதமர் கனவுக்காக தனது மாநில மக்களையும் காட்டிக் கொடுக்கத் தயாராகிவிட்டார் என்றும் நரேந்திர மோடி சாடினார்.
பாட்னாவின் காந்தி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பேசும்போது, "ஜெயபிரகாஷ் நாராயணை புறக்கணித்துவிட்டு, அவரிடமிருந்து விலகியவரால் (நிதிஷ் குமார்) பாஜக கூட்டணியில் இருந்து விலக முடியாதா என்ன?
தேசத்தை காங்கிரஸிடமிருந்து மீட்க தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் ராம் மனோகர் லோகியா. அவரின் மாணவர் எனக் கூறிக்கொள்பவர் (நிதிஷ் குமார்), லோகியாவின் முதுகில் குத்தும் வகையில் காங்கிரஸுடன் மறைமுகமாக உறவை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.
இந்த இரு மூத்த தலைவர்களின் ஆதரவாளர்கள் வேண்டுமானால் அவரை (நிதிஷ் குமாரை) மன்னிக்கலாம். ஆனால், அந்த தலைவர்களின் ஆத்மா என்றைக்குமே அவரை (நிதிஷை) மன்னிக்காது. அவர் (நிதிஷ்) ஒரு சந்தர்ப்பவாதி.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பிகாரில் பிரசாரம் செய்யவிருந்த என்னை நிதிஷ் தடுத்தார். பிகாரில் மீண்டும் (லாலு கட்சியின்) காட்டாட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக, அவரின் அந்த செயலைப் பொறுத்துக் கொண்டேன்.
ஒருமுறை டெல்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில், பிரதமருடன் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமருடன் நானும், நிதிஷும் அமர்ந்திருந்தோம். அப்போது சாப்பிடாமல், அசௌகரியமாக சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார் நிதிஷ்.
என்ன பிரச்சினை என நான் புரிந்துகொண்டேன். அவரிடம், பயப்படாதீர்கள். இங்கே பிரதமருடன் உங்களைச் சேர்த்துப் படம்பிடிக்க கேமரா எதுவும் இல்லை. சாப்பிடுங்கள், பாசாங்கு செய்வதற்கும் ஒரு அளவு உள்ளது என்று கூறினேன்.
மதச்சார்பின்மை என்ற போர்வையில் காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது. நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல இந்து – முஸ்லிம் ஒற்றுமை வேண்டும். இந்த இருதரப்பினரும் தங்களுக்குள் மோதலில் ஈடுபடாமல், ஒன்றாக இணைந்து வறுமையை எதிர்த்துப் போராட வேண்டும்" என்றார் மோடி.
முன்னதாக, பொதுக்கூட்டம் அருகே நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர்; சுமார் 70 பேர் காயமடைந்தனர். எனினும், இயல்பு நிலைத் திரும்பியதும் திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடந்தது.