Last Updated : 20 Nov, 2014 09:55 AM

 

Published : 20 Nov 2014 09:55 AM
Last Updated : 20 Nov 2014 09:55 AM

மத்திய அமைச்சர்கள் பிஹாருக்குள் கால் வைக்க முடியாது: முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி எச்சரிக்கை

பிஹார் மாநிலத்துக்கு மத்திய அரசிடமிருந்து தேவையான உதவிகளைப் பெற்று வரவில்லையெனில், மத்திய அமைச்சரவையில் உள்ள அந்த 7 அமைச்சர்கள் பிஹாருக்குள் கால் வைக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிஹாரைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

அந்த 7 அமைச்சர்களை 'ஏழு சகோதரர்கள்' என்று ஜிதன்ராம் மாஞ்சி அழைப்பது வழக்கம். அந்த 7 பேர்களின் பெயரை வெளிப்படையாகச் சொல்லவில்லை எனினும் அவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும். ராதா மோகன் சிங், ரவி ஷங்கர் பிரசாத், ராம் விலாஸ் பாஸ்வான், ராஜீவ் பிரதாப் ரூடி, உபேந்திர குஷ்வாஹா, ராம் கிருபால் யாதவ் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோர்தான் அந்த 7 பேர்.

இவரது இக்கருத்துக்கு மத்திய‌ கிராம மேம்பாடு மற்றும் சுகாதாரத்துறையின் இணை அமைச்சர் ராம் கிருபால் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடையே அவர் பேசும்போது, "லாலு பிரசாத் யாதவும், நிதிஷ் குமாரும் தரும் மன அழுத்தத்தால் மாஞ்சி இவ்வாறு சட்டத்துக்குப் புறம்பான கருத்துகளைக் கூறி வருகிறார்" என்றார்.

இதற்கிடையே, பிஹாரில் நேற்று ‘உலக கழிவறை தினம்' கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது பேசிய ஜிதன்ராம் மாஞ்சி, "நான் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டுதான் முதல்வர் ஆனேன். எனில், அதேபோன்று இடையூறுகளை எதிர்கொண்டே என்னால் பிரதமராகவும் ஆக முடியும்" என்றார்.

மேலும் அவர், "2019க்குள் மாநிலத்தில் இரண்டு கோடி கழிவறைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் சுமார் 269 லட்சம், மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கழிவறையைக் கட்டினால் கூட நாம் மேற்கொண்டுள்ள இலக்கில் பாதியைத் தொட முடியும். அதேபோன்று மாநிலத்தில் 50 லட்சம் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. அவர்களும் இதில் பங்கேற்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x