

பிஹார் மாநிலத்தில் விவசாய நிலங்களில் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதாகக் கூறி, நீலா (நிலகை) மான்களை சுட்டுக் கொல்ல பிஹார் அரசு மத்திய அரசிடம் கோரியது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 6 நாட் களில் 200 நீலா மான்கள் கொல்லப் பட்டுள்ளன.
இதற்கு மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வன விலங்கு ஆர்வலரான மேனகா காந்தி, 200 நீலா மான்கள் கொல்லப் பட்ட சம்பவத்தை “இதுவரை இல்லாத மிகப்பெரும் படுகொலை” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வனவிலங்கு படுகொலைக் கான வெறியை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் விமர்சித் துள்ளார்.
“மத்திய சுற்றுச்சூழல் அமைச் சகம் அனைத்து மாநில அரசுகளுக் கும் கடிதம் எழுதுகிறது. கொல்லப் படவேண்டிய விலங்குகளைப் பட்டியலிட அனுமதிக்கிறது. அப்போதுதான், அதற்கு மத்திய அரசு அனுமதிக்க முடியும். இவ் வாறு நடப்பது இதுவே முதல் முறை. வனவிலங்குகளைக் கொல் வதற்கான இந்த வெறியை என்னால் புரிந்துகொள்ள முடிய வில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் நீலா மான்களையும், மேற்கு வங்கத்தில் யானைகளை யும், இமாச்சலப் பிரதேசத்தில் குரங்குகளையும், கோவாவில் மயில்களையும், சந்திரபூரில் காட்டுப் பன்றிகளையும் கொல்ல மத்திய அரசு அனுமதிக்கிறது. இதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என மாநில அரசின் வனத்துறை தெரிவிக்கிறது என மேனகா குற்றம்சாட்டியுள்ளார்.
பிஹாரில் நீலா மான்களைக் கொல்ல கிராமத் தலைவரோ, விவசாயிகளோ கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், “விலங்குகளை வேட்டையாட அனுமதித்தது, வனவிலங்கு எண்ணிக்கையை அறிவியல் ரீதியாக நிர்வகிப்பதன் ஒரு பகுதி. தீங்கு விளைவிக்கும் என அடையாளப்படுத்தப்பட்ட விலங்கை குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும் வேட்டையாட அனுமதிக்கப்படு கிறது” என மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறும்போது, “ஏற் கெனவே இருக்கும் சட்டத்தின் அடிப்படையில்தான் இந்த அனுமதி வழங்கப்படுகிறது. விவசாயிகள் ஏராளமான பிரச்சினைகளைச் சந்திக்கும்போதும், அவர்களின் பயிர்களுக்குச் சேதம் விளைவிக் கப்படும்போதும் மாநில அரசு ஒரு பரிந்துரையை அனுப்பும். அதன் பிறகே, வனவிலங்குகளைக் கொல்ல நாங்கள் அனுமதி அளிக்கிறோம். அதுவும் குறிப் பிட்ட பகுதியில், குறிப்பிட்ட கால அளவில் இதனை மேற் கொள்ள அறிவியல்பூர்வ மேலாண் மையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. இது மத்திய அரசின் திட்டமல்ல. சட்டம் அப்படி இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் நீலா மான் களைக் கொல்ல 39 மாவட்டங்களில் வரும் நவம்பர் 31-ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“மகாராஷ்டிர மாநிலம் வறட்சி பாதித்த சந்திரபூர் பகுதியில் 53 காட்டுப் பன்றிகள் கொல்லப் பட்டுள்ளன. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 50 அல்லது அதற்கு மேற்பட்ட காட்டுப்பன்றிகளைக் கொல்ல அனுமதி அளித்துள்ளது. ஆனால், மாநில வனத்துறை இதனை விரும்பவில்லை” என மேனகா குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
வனவிலங்குகள் கொல்லப்படும் விவகாரத்தில் இரு மத்திய அமைச்சர்கள் முரண்பட்டு நிற்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.
அமைச்சரகங்களுக்கு இடையே இணக்கம் இல்லை. இவ்வாறு நடப்பது முதல்முறை அல்ல. இதனால், பல பணிகள் முடங்கு கின்றன. அணியாக ஒன்று சேர்ந்து செயல்படாத தன்மைதான் இது என ஐக்கிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக் தெரிவித்துள்ளார்.