

நாட்டில் உள்ள அமெரிக்கா உள்பட அயல்நாட்டுத் தூதர்கள், தூதரக அதிகாரிகள் என அனைவரது பாதுகாப்பினையும் அரசு உறுதி செய்யும் என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொதுஇடத்தில் வைத்து கைவிலங்கிட்டு கைது செய்யப்பட்டதற்கும், ஆடைகளை களையப்பட்டு சோதனை செய்யப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்தியாவின் இந்த பதில் நடவடிக்கை குறித்து அமெரிக்கா வருத்தம் தெரிவித்தது. மேலும் இது பழிவாங்கும் செயல் எனவும் விமர்சித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்கா உள்பட அனைத்து தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்றும், தூதரக அதிகாரிகள் பாதுகாப்பை உறுதி செய்வதில் வியன்னா ஒப்பந்தம் விதிமுறைகளை இந்தியா முழுவதுமாக பின்பற்றும் என்றும் இதை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.