ரயிலை தவறவிட்டதால் அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்த உம்மன்சாண்டி: சக பயணிகள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி

ரயிலை தவறவிட்டதால் அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்த உம்மன்சாண்டி: சக பயணிகள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி
Updated on
1 min read

கேரளாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏற்க மறுத்துவிட்டார். சாதாரண எம்எல்ஏ.வாகவே இருக்கிறேன் என்று கூறினார். அதனால் அரசியல் பரபரப்பில்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரயிலில் வருவதாக திட்டமிட்டிருந்தார்.

ஆனால், ரயிலை தவறவிட்டுவிட்டார். அவரது பாதுகாவலர்கள் கார் ஏற்பாடு செய்வதாக கூறியதையும் ஏற்க மறுத்து விட்டார். கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினார்.

அந்த பேருந்தில் இருந்த பெண் நடத்துநர் கூறும்போது, ‘‘உம்மன்சாண்டி பேருந்தில் ஏறியதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அவருக்கு ஓட்டுநருக்கு பின்னால் இருக்கும் இருக்கையை ஒதுக்கி கொடுத்தேன்’’ என்றார். பேருந் தில் இருந்த சக பயணிகளும் ஆச்சரியம் அடைந்தனர். அவரிடம் சென்று பலர் பேசினர். பலர் உற்சாகமாக கைகுலுக்கி ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.

உம்மன்சாண்டி பேருந்தில் பயணம் செய்யும் தகவல் அறிந்து நிருபர்கள் பலரும் அதே பேருந்தில் பயணம் செய் தனர். திருவனந்தபுரத்தில் உம்மன் சாண்டியை அழைத்து செல்ல வந்திருந்த கார் இருக்கும் இடத்திலும் ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்தனர். திருவனந்தபுரம் வந்ததும் அவர்களிடம் உம்மன்சாண்டி கூறும்போது, ‘‘கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் பயணம் செய்வதை எப்போதும் விரும்புவேன். அதிலும் விரைவு பேருந்தில் செல்வது பிடிக்கும். ஆனால், நிறைய நிகழ்ச்சிகள் இருந்ததால் என்னால் பயணம் செய்ய முடிவதில்லை. இப்போது பயணம் செய் வதற்கு நிறைய நேரம் இருக்கிறது. பேருந்தில் தொடர்ந்து பயணம் செய்வேன்’’ என்றார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கொல்லத்தில் இருந்து திருவனந்த புரத்துக்கு 75 கி.மீ. தூரம் உம்மன்சாண்டி பேருந்தில் பயணம் சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in