

காஷ்மீரில் இளைஞர் ஒருவர் இன்று மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் 10 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது.
காஷ்மீரில் கடந்த 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. தொடர்ந்து அங்கு பதற்றநிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் அனந்தநாக் மாவட்டம், கொகர்நாக் பகுதியில் வன்முறையில் காயமடைந்த இஷ்தியாக் அகமது என்ற இளைஞர் ஸ்ரீநகரில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதன்மூலம் காஷ்மீரில் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் வன்முறைச் சம்பங்கள் நிகழவில்லை. எனினும் வெள்ளிக்கிழமை தொழுகை நாளில் வன்முறை வெடிக்கும் வாய்ப்புள்ளதால் பள்ளத்தாக்கின் 10 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது.
காஷ்மீரில் பாரமுல்லா, பண்டிபோரா, பட்காம், கந்தர்பால் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்காக வியாழனன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டது. என்றாலும் குழந்தைகளை பெற்றோர் அனுப்பாததால் இந்த மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் மூடியுள்ளன.
காஷ்மீரில் மொபைல் போன், மொபைல் இன்டெர்நெட் சேவை 14-வது நாளாக இன்றும் முடக்கி வைக்கப்பட்டது. பிரிவினைவாதிகள் நடத்தும் போராட்டம் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் கடந்த 2 வாரங்களாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.