நேருவின் நேர்மையை சந்தேகிக்க முடியாது: ராஜ்நாத் சிங்

நேருவின் நேர்மையை சந்தேகிக்க முடியாது: ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

நேருவின் கொள்கைகள் குறித்து விமர்சனங்கள் இருக்க முடியும், ஆனால் அவரது நேர்மையை சந்தேகிக்க இடமில்லை, என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்த நாள் விழாவையொட்டி ராஜ்நாத் சிங் உரையாற்றும்போது, “அவரது கொள்கைகள் மேல் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் அவரது நேர்மையை சந்தேகிக்க முடியாது.

மக்களின் அறிவு மீது நம்பிக்கை கொண்டு ஜனநாயகக் கொள்கைகளை அவர் வளர்த்தெடுத்தார். இந்திய ஜனநாயகம் மேட்டுக்குடியினருக்குரியது என்றும் ஒரு குடும்பம்தான் இந்த நாட்டை ஆள முடியும் என்று மக்கள் கருதினர். ஆனால் அவரது ஜனநாயகக் கொள்கையால்தான் இன்று சாதாரண வாக்கும் தேநீர் விற்றவரை பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்துள்ளது.

நேரு எந்த ஒரு பொருளாதார கருத்தியலையும் எதிர்த்தவர் அல்ல அவர் சோஷலிச மற்றும் கம்யூனிச கருத்தியல்களை ஏற்றுக் கொண்டார். ஆனாலும் அவற்றின் வரம்புகள் பற்றிய கவனத்துடனும் இருந்தார். அதனால்தான் கலப்பு பொருளாதார கொள்கையில் அவர் தஞ்சமடைந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் சீனா குறித்த அவரது கொள்கைகளை நாங்கள் ஏற்கவில்லை. ஆனால் அணிசாரா நாடுகள் இயக்கம் உருவானதில் அவர்தான் பின்னணியில் திகழ்ந்த பெரிய சக்தி” என்றார்.

மத்திய கலாச்சார இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், “நேரு இந்த நாட்டின் மனிதர், ஒரு குடும்பத்தின் நபர் அல்ல. பிரதமர் மோடி நேருவிற்காக இந்த ஆண்டு முழுதும் கொண்டாட முடிவெடுத்துள்ளார். நேரு இன்றும் அனைத்து குடிமக்கள் மனதிலும் நீங்கா இடம்பெற்று, தூண்டுகோலாக இருந்து வருகிறார்.” என்றார்.

மேலும், நேருவின் எழுத்துக்கள் அடங்கிய இணையதளம் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரிஸ்பனில் உள்ள பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “சுதந்திரப் போராட்டத்தில் பண்டித நேருவின் பங்களிப்பையும், இந்தியாவின் முதல் பிரதமராகவும் நாம் அவரை நினைவில் கொண்டுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in