Last Updated : 10 Sep, 2016 07:31 AM

 

Published : 10 Sep 2016 07:31 AM
Last Updated : 10 Sep 2016 07:31 AM

காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தால் தமிழக போக்குவரத்து முடங்கியது: கர்நாடக முழு அடைப்பில் தீவைப்பு; வன்முறை

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது; முதல்வர்கள், நீதிபதிகளுக்கு எதிராக மண்டியா நீதிமன்றத்தில் மனு

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் பெங்களூரு, மண்டியா, மைசூரு உள்ளிட்ட இடங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் தமிழக போக்குவரத்தும் முடங்கியது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘காவிரியில் 10 நாட் களுக்கு தினமும் வினாடிக்கு 15,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும்’’ என கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதை கண்டித்து போராட்டம் வெடித் ததை தொடர்ந்து கர்நாடக‌ முதல்வர் சித்தராமையா அவசரமாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, தமிழகத்துக்கு 15 ஆயிரம் கன அடி நீரை திறக்க உத்தர விட்டார். கடந்த புதன்கிழமை நள்ளிரவு கர்நாடக அணை களில் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நேற்று மேட்டூர் அணையை வந்தடைந்த‌து.

இந்நிலையில், தமிழகத் துக்கு காவிரி நீர் திறக்கப் பட்டதை கண்டித்து வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகளின் கூட்ட மைப்பின் சார்பாக நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ந‌டைபெற்ற இந்த போராட்டத்தில் பாஜக, மஜத, இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், க‌ன்னட சலுவளி கட்சி, கன்னட ரஷன வேதிகே, ஜெய் கர்நாடகா உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினரும், 300-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினரும், கன்னட திரைத்துறையினரும் பங்கேற் றனர்.

இதையடுத்து பெங்களூரு, மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், ராம்நகர்,ஹாசன் என தென் கர்நாடகா முழுவதும் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. மேலும் கடைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.

இதனால் வெளியூர் பயணிகள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக் கப்பட்டனர். கர்நாடக முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. முழு அடைப்பு காரணமாக பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட தென் கர்நாடகா முழுவதும் கடைகள் அடைக்கப் பட்டு வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த சாலைகளில் கன்னட அமைப் பினர் பழைய டயர்களையும், மரக்கட்டை களையும் போட்டு தீயிட்டு கொளுத்தினர்.

துண்டிக்கப்பட்ட தமிழகம்

கன்னட அமைப்புகளின் போராட் டத்தை தொடர்ந்து கர்நாடகா- தமிழகம் இடையேயான போக்குவரத்து 5-வது நாளாக நேற்றும் முழுமையாக துண்டிக்கப்பட்டது. தமிழக பதிவெண் கொண்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மண்டியா, மைசூரு, பெல்லாரி, பெங்களூரு ஆகிய இடங்களில் கன்னட அமைப்பினரால் தாக்கப்பட்டன. பெல்லாரி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 3 லாரிகள் கல் வீசி தாக்கப்பட்டதால் அதிலிருந்த ஓட்டுநர்கள் பீதியடைந்து அலறியடித்து ஓடினர்.

கன்னட அமைப்பின ரின் மிரட்டல் காரணமாக கர்நாடகாவில் திரையிடப் பட்டிருந்த அனைத்து தமிழ்த் திரைப்படங்களின் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. அனைத்து த‌மிழ் தொலைக்காட்சி சேனல் களின் ஒளிபரப்பும் நிறுத்தப் பட்டன. தமிழ் நாளிதழ்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

பெங்களூரு அதிர்ந்தது

முழு அடைப்பு போராட்டத்தின் ஒருங் கிணைப்பாளரான வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய கன்னட அமைப்பினர் இருவரின் உருவ பொம்மைகளையும் எரித்தனர். மேலும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், கர்நாடக அரசு வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

மண்டியா, ராம்நகர், சாம்ராஜ் நகர், மைசூரு ஆகிய இடங்களில் சாலை களில் டயர்களும், மரக்கட்டைகளும் கொளுத்தப்பட்டன. மண்டியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 3 விவசாயிகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன் றனர். அவர்கள் உடனடியாக மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதே போல ஸ்ரீரங்கப்பட்டினா, கிருஷ்ணராஜசாகர் ஆகிய இடங்களில் பாயும் காவிரி ஆற்றில் குதித்து ராம கவுடா (58), சோமா கவுடா (43) ஆகிய இரு விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றனர். அப்போது தீயணைப்பு படையினர் ஆற்றில் நீந்தி விவசாயிகளை மீட்டனர். மேலும் மண்டியாவை சேர்ந்த ராமப்பா என்பவர் தனது கையை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதே போல பெங்களூரு சுதந்திரப்பூங்காவில் நடந்த பேரணியில் பங்கேற்ற பிரபு (30) என்பவரும் தற்கொலைக்கு முயன்றார்.

கிருஷ்ணராஜசாகரில் வன்முறை

மண்டியாவில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட குழு தலைவர் மாதே கவுடா தலைமையில் கிருஷ்ணராஜசாகர் அணையை நோக்கி முற்றுகை பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது விவசாயிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

ஆவேசம் அடைந்த விவசாயிகள் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை சரமாரியாக தாக்கியதால் வயலுக்குள் இறங்கி சிதறி ஓடினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும், பத்துக்கும் மேற்பட்ட போலீஸாரும் காயமடைந்தனர்.

முழு அடைப்பை தொடர்ந்து க‌ர்நாடக போலீஸாருடன் ஊர்க்காவல் படையினர், துணை இராணுவப் படையினர், மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது தவிர கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 10 கம்பெனி போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

போராட்டம் தொடரும்

பெங்களூருவில் மாபெரும் பேரணியை நடத்திய கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், ‘‘எங்களுடைய முழு அடைப்பு போராட்டத்துக்கு வரலாறு காணாத வெற்றி கிடைத்துள்ளது. காவிரி விவகாரத்தில் முழுமையான வெற்றி கிடைக்கும் வரை ஓய மாட்டோம். மத்திய மாநில அரசுகளும், தமிழக அரசும் கர்நாடக மக்களை வஞ்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் தக்கப் பாடம் கற்பிப்போம். தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ள காவிரி நீரை நிறுத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும்''என்றார்.

இதனிடையே மண்டியாவை சேர்ந்த விவசாயி ராஜண்ணா என்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித், சித்தராமையா, ஜெயலலிதா, எம்.பி.பாட்டீல், இரு மாநில தலைமை செயலர்கள் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு மண்டியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x