Last Updated : 07 Sep, 2016 12:52 PM

 

Published : 07 Sep 2016 12:52 PM
Last Updated : 07 Sep 2016 12:52 PM

உ.பி.யில் ராகுல் காந்தியின் கட்டில் சபை கூட்டத்துக்கு பின் மாயமான 5,000 கட்டில்கள்!

உ.பி. சட்டசபை தேர்தலுக்காக 'கட்டில் சபை' எனும் பெயரில் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் துவக்கினார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி. ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்துக்குபின் சுமார் 5000 கட்டில்கள் மாயமாயின.

உ.பி. மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த வருடம் தேர்தல் வரவிருக்கிறது. இங்கு தன் முதல் அமைச்சர் வேட்பாளராக டெல்லி முன்னால் முதல்வர் ஷீலா தீட்சித்தை முன்னிறுத்திய காங்கிரஸ் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறது. இதில், உபி விவசாயிகளுக்காக 'கட்டில்கள் சபை' எனும் பெயரில் தன் பிரச்சாரத்தை துவக்கி உள்ளார் ராகுல். இதன் முதல் கூட்டம் உபியின் தியோரியா மாவட்டத்தில் உள்ள ருத்ரபூரில் துவங்கியது. 'தியோரியா முதல் டெல்லி வரை யாத்திரை' எனும் பெயரிலான இந்த விவசாயிகள் சபைகளுக்கு காங்கிரஸின் தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் யோசனை அளித்திருந்தார்.

இதன்படி, உ.பி.யின் சம்பல் மாவட்டத்தில் சுமார் 60,000 கயிற்றுக் கட்டில்கள் தயாரிக்க காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இங்கிருந்து முதல் கூட்டத்துக்கு வந்த 6000 கயிற்றுக் கட்டில்களில் சுமார் 5000 கூட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் மாயமாயின. கூட்டத்துக்குவந்திருந்த அக்கம், பக்க கிராமத்தினர் கூட்டம் வரை காத்திருந்தனர். இது முடிந்ததும் கட்டில்களை கையோடு எடுத்துச் சென்று விட்டனர்.

இது குறித்து சம்பலில் இருந்த வந்த கட்டில் தயாரிப்பாளரின் பணியாளரான ஜித்து குமார் கண்ணீர் மல்க கூறுகையில், 'இங்கு பயன்படுத்தப்பட்ட கட்டில்களை அடுத்த கூட்டங்களுக்காக பைஸாபாத் மற்றும் லக்னோ வரை கொண்டு செல்ல வேண்டியது என்னுடைய பொறுப்பு. இதில் 1000 கட்டில்களை காப்பாற்றுவதே பெரிய பாடாகி விட்டது. இதை முன்கூட்டியே காங்கிரஸ் தலைவர்களிடம் எச்சரித்த போது பாதுகாப்பிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தனர். இப்போது அதில் ஒருவர் கூட எனது போனை எடுக்கவில்லை. இதன் நஷ்டத்திற்கு நான் எனது முதலாளிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை' எனப் புலம்பியுள்ளார்.

தலா ஒரு கட்டில் ரூபாய் 600 விலையில் வாங்கப்பட்டிருந்தது. இவை உபியில் ராகுல் நடத்தும் அனைத்து கட்டில் சபைகளிலும் பயன்படுத்துவது எனவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், காலை ராகுலின் கூட்டம் துவங்குவதற்கு முன் அதில் விவசாயிகள் மற்றும் கிராமத்தினர் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர் மேடை ஏறியதும் ராகுலை தெளிவாகப் பார்க்க வேண்டி பெரும்பாலானவர் கட்டிலில் ஏறி நின்றனர். இதனால், பெரும்பாலான கட்டில்களின் கயிறுகள் அறுந்து வீணாகி விட்டன. இவற்றில் சில உடைந்தும் போய்விட அவற்றையும் விட்டு வைக்காமல் கிராமத்தினர் விறகுக்காக எடுத்து சென்று விட்டனர்.

இவை அனைத்தையும் அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதை அவர்களிடம் காங்கிரஸார் சுட்டிக்காட்டிய போது அவர்கள், கட்டில்களை பாதுகாக்கக் கூறி தங்களுக்கு உத்தரவிடப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதுவன்றி, மூங்கிலாலான 500 இருக்கைகளும் மாயமாகி இருந்தன. பிறகு இவற்றில் பெரும்பாலானவற்றை கிராமத்தினரிடம் கைகூப்பி வணங்கிய காங்கிரஸார் திரும்ப பெற்று வந்தனர்.

இது குறித்து 'தி இந்து'விடம் உ.பி காங்கிரஸ் தலைவர்கள் வட்டாரம் கூறூகையில், 'ராகுலின் பிரச்சாரத்தில் கூட்டம் சேர்க்க பிரஷாத் கிஷோர், கட்டில் யுக்தி செய்திருந்தார். ஆனால், அவருக்கு உ.பி கிராமத்தினர் நிதர்சனம் தெரியாமல் திட்டமிட்டு விட்டார். இதன் பலனாக கூட்டம் வந்தது என்னவோ உண்மை தான். ஆனால், அவர்கள் போகும் போது கட்டிலகளையும் கையோடு கொண்டு செல்வார்கள் என கிஷோருக்கு தெரியாமல் போய் விட்டது" என்றார்.

இந்நிலையில், அடுத்த வரவிருக்கும் ராகுலின் கூட்டங்களில் கயிற்றுக் கட்டில்களை பயன்படுத்துவதா? வேண்டாமா? என காங்கிரஸ் யோசிக்கத் துவங்கி உள்ளது. எனினும், வேறு வழியின்றி இன்று அருகிலுள்ள குஷிநகரில் நடைபெற்ற ராகுலின் கூட்டத்திலும் கயிற்றுக் கட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில், ராகுலின் வருகைக்கு முன்பாக மேடை ஏறிய முன்னாள் மத்திய அமைச்சரான ஆர்.பி.என்.சிங், கட்டில்களை எடுத்து செல்ல வேண்டாம் எனக் கைகூப்பி வேண்டிக் கொண்டார். இத்துடன், கூட்டத்தின் முக்கிய வாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி கட்டில்களை காக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக ருத்ரபூரில் கட்டில்கள் மாயமான சம்பவம் குஷிநகரில் தவிர்க்கப்பட்டு விட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x