

சீக்கியர் படுகொலை 30-ம் ஆண்டு நினைவு நாள் ஆர்ப்பாட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரிவினைவாத தலைவர்களுடன் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் கலந்துகொண்டார்.
1984-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய பாதுகா வலர்கள் இருவரால் தனது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. இதன் நினைவு நாள் ஆர்ப்பாட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் பிரிவினைவாத அமைப்புகள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமானும் கலந்துகொண்டார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் சீமான் கூறும்போது, “இதன் முக்கிய நோக்கமே தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி பெறுவது. இதை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத்தர யாரும் முன்வரவில்லை. எனவே, எங்களை போல் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து போராட முடிவு செய்து விட்டோம்.
சீக்கியர், இலங்கைத் தமிழர் உட்பட அனைத்து படுகொலைக்கும் நம் இந்திய அரசுதான் காரணம். எனவே அதனிடம் நீதிகேட்டு பயனிருக்காது என்பதால், அதை ஐ.நா அமைப்பிடம் பெற்றுத்தர வேண்டி மனு அளிக்க இருக்கிறோம்.
இதுவரை 840 தமிழக மீனவர்கள் மற்றும் லட்சத்துக்கும் அதிகமான இலங்கை தமிழர்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்துள்ளது. இத்தனைக்கு பிறகும் இலங்கை அரசுக்கு உதவுவதாகத்தான் இந்திய அரசு சொல்லிக்கொண்டிருக்கிறது. தற்போது கூட இந்தியா வந்த கோத்தபய ராஜபக்ச - அருண்ஜேட்லி இடையிலான பேச்சுவார்த்தையில் இலங் கைக்கு தடையற்ற ஆயுதம் கொடுப்போம் என ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். எந்த நாட்டுடனும் சண்டை போடாத இலங்கை, ஆயுதம் பெற்றால் நம் தமிழக மீனவர்களையும், அங்குள்ள தமிழ் இனங்களையும் கொல்லும்” என்றார்.
பஞ்சாபை தனிநாடாகக் கோரும் அமைப்பான சீக்கியர்களின் தல் கல்சா ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காஷ்மீரின் ஹுரியத் மாநாடு, நாகாலாந்தின் நாகர் மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக டெல்லியின் குருத்துவாராவில் சிறப்பு பிரார்த் தனை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தலைவர்கள் ஜந்தர் மந்தருக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.