

ஒரு மாநிலத்தில் கலவரம் உள்பட எந்த விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அதற்கு அம்மாநில முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் கூறியுள்ளார்.
2002-ம் ஆண்டில் குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்துக்கு அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி பொறுப்பாவாரா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில் சரத் பவார் மேலும் கூறியுள்ளது:
நான் மகாராஷ்டிர முதல்வராக இருந்தபோது மாநிலத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்ததால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொண்டேன். அந்த சம்பவங்களில் எனக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்பதால் அதில் எனக்கு எவ்வித பொறுப்பும் இல்லை என்று கூற முடியாது. ஒரு முதல்வராக, ஒரு உள்துறை அமைச்சராக, மாநிலத்தின் நிர்வாகியாக மக்களின் நலனைக் காப்பது எனது கடமை. அதில் தவறு நேரும்போது நிச்சயமாக அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அதே நேரத்தில் இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறுகிறதோ அதனை நாம் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.
ஒரு மாநிலம் வளர்ச்சி அடைகிறது என்றால் அதற்கு அப்போதைய முதல்வர் மட்டும்தான் காரணம் என்று கூறுவது தவறு. அது குஜராத்தாக இருந்தாலும் சரி மகாராஷ்டிரமாக இருந்தாலும் சரி தொடர்ந்து பல முதல்வர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் மாநிலம் வளர்ச்சிப் பாதையை எட்டும் என்றார் சரத் பவார்.
மோடி குறித்த உங்கள் மதிப்பீடு என்ன என்ற கேள்விக்கு,
கட்சி வேறுபாடு இன்றி பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பழகி வருகிறேன். இதில் மோடியுடன் எனக்கு நல்ல மாதிரியான உறவுதான் உள்ளது என்றார்.