

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்ய பிஹாரின் வைசாலி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நசிமுதீன் சித்திகீ, மாநிலத் தலைவர் ராம் அச்சல் ராஜ்பர், மாநிலச் செயலாளர் மேவா லால் ஆகியோர் மற்ற மூவர் ஆவர்.
இது தொடர்பாக ஹாஜிபூரை சேர்ந்த அஜித் சிங் என்பவரின் புகாரை முதன்மை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் ஜெய்ராம் பிரசாத் ஏற்றுக்கொண்டார். ஹாஜிபூர் நகர காவல்நிலையத்தில் நால்வர் மீதும் அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
மாயவதியை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசிய, உ.பி. மாநில பாஜக துணைத் தலைவர் தயாசங்கர் சிங் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவருக்கு எதிராக லக்னோவில் கடந்த 21-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. அப்போது தயாசங்கர் சிங்கின் மனைவி மற்றும் மகளுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் மாயவதியும் பிற தலைவர்களும் பேசியதாக மனுதாரர் அஜித் சிங் தனது மனுவில் கூறியிருந்தார். மாயாவதி உள்ளிட்ட நால்வர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய அவர் கோரியிருந்தார்.