தீவிரவாதத்தை தூண்டும் பேச்சு: இஸ்லாமிய மதபோதகர் மீது நடவடிக்கை: அமைச்சர் சூசக தகவல்

தீவிரவாதத்தை தூண்டும் பேச்சு: இஸ்லாமிய மதபோதகர் மீது நடவடிக்கை: அமைச்சர் சூசக தகவல்
Updated on
1 min read

‘‘தீவிரவாதத்தை தூண்டும் வகையில் பேசிய இஸ்லாமிய மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ரெஸ்டாரன்ட்டில் சில நாட்களுக்கு முன்னர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவரை உயிருடன் பிடித்தனர். இந்நிலையில், டாக்கா ரெஸ்டாரன்ட்டில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரான ‘‘அவாமி லீக் தலைவரின் மகன் ரோஹன் இம்தியாஸ், இந்திய இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு தீவிரவாதத்துக்கு மாறி உள்ளார். நாயக்கின் பேச்சுகளை மேற்கோள் காட்டி பல கருத்துகளை முகநூலில் ரோஹன் வெளியிட்டுள்ளார்’’ என்று வங்கதேசத்தில் இருந்து வெளிவரும் ‘டெய்லி ஸ்டார்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஜாகீர் நாயக்கின் பேச்சுகள் எங்களுக்கு கவலை அளிக்கின்றன. ஆனால், அமைச்சர் என்ற முறையில் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்னால் கூற இயலாது. வங்கதேசத்துடன் இந்தியா நெருங்கிய உறவு வைத்துள்ளது. குறிப்பாக தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றி வருகின்றன’’ என்றார்.

மும்பையை சேர்ந்த இஸ்லாமிய ஆராய்சசி பவுண்டேஷனை நிறுவியர் ஜாகீர் நாயக். மிகவும் பிரபலமான மதபோதகராக விளங்கும் நாயக், சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். குறிப்பாக ‘‘பீஸ் டிவி’ என்ற சர்வதேச இஸ்லாமிய தொலைக்காட்சியில் நாயக் பேசுகையில், ‘‘எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக மாற வேண்டும்’’ என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற மதங்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதால், நாயக்கின் பவுண்டேஷனுக்கு இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன. மேலும், மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in