Last Updated : 07 Sep, 2016 10:07 AM

 

Published : 07 Sep 2016 10:07 AM
Last Updated : 07 Sep 2016 10:07 AM

அரசை விமர்சிப்பவர்கள் மீது தேச நிந்தனை வழக்கு கூடாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

அரசை விமர்சிப்பவர்கள் மீது தேச நிந்தனை அல்லது அவதூறு வழக்கு தொடரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

காமன் காஸ் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட பொதுநல மனு ஒன்றில், ‘நாடு முழுவதும் அரசை விமர்சிப்பவர்கள் மீதும், அறிவுஜீவிகள், பொதுநலனுக்கு போராடுவோர் மற்றும் மாணவர்கள் மீதும் தேச நிந்தனை மற்றும் அவதூறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு இதுபோன்று 47 வழக்குகள் தொடரப்பட்டு, 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஒரே ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் அருந்ததி ராய் மீதும், 2012-ல் கார்ட்டூன் வரைந்த குற்றத்திற்காக அசீம் திரிவேதி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டாக்டர் பினாயக் சென், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கிலானி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேச நிந்தனை சட்டப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதால், இப்பிரிவில் வழக்கு பதிவு செய்யும் முன், டிஜிபி அல்லது போலீஸ் கமிஷனர் சார்பில் அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும். அதில் குற்றம்சாட்டப்படுபவருக்கு தேச நிந்தனை நோக்கம் இருப்பதாகவோ, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகவே நிரூபிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அரசை விமர்சிப்பவர்களுக்கு எதிராக தேச நிந்தனை மற்றும் அவதூறு பிரிவுகளை பயன்படுத்தக் கூடாது என்று அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124(ஏ)-ன்படி, தேச நிந்தனை குற்றத்திற்காக வழக்கு தொடர வேண்டுமென்றால் அதற்குரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதை விளக்கத் தேவையில்லை. ஏற்கனவே கேதார்நாத் சிங் வழக்கில் உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு இதுகுறித்து விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தனர்.

கூடங்குளம் போராட்டம்

தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ‘கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்த அமைப்பினர் மீதும் இப்பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இப்பிரிவு நாடு முழுவதும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் சட்டத் திருத்தம் செய்யாததால், இப்பிரிவை சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் புரிந்து கொள்வதில்லை. எனவே, இந்த உத்தரவை அனைத்து மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் டிஜிபி-க்களுக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், ‘தேச நிந்தனை பிரிவை கான்ஸ்டபிள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வழக்கை விசாரிக்கும் மாஜிஸ்திரேட் புரிந்து கொண்டால் போதும். எனவே, மாநில தலைமைச்செயலர்கள் மற்றும் டிஜிபி-களுக்கு அனுப்பத் தேவையில்லை’ என்று கூறி மனுவை முடித்து வைத்தனர். மேலும், குற்றவியல் வழக்குகளைப் பொறுத்தமட்டில், பொதுவாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அப்படி செய்வது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். ஏதாவது குறிப்பிட்ட வழக்கில் இப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால், அதை குறிப்பிட்டு தனியாக மனு செய்தால், அதன்மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x