2014 தேர்தலுக்கு தயாராகுமாறு கட்சியினருக்கு சோனியா அழைப்பு

2014 தேர்தலுக்கு தயாராகுமாறு கட்சியினருக்கு சோனியா அழைப்பு
Updated on
1 min read

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு, அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய அவர்: "நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியினர் ஆர்வத்தோடு தயாராக வேண்டிய தருணம் இது. அண்மையில் முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி குறித்து எவ்விதமான அவநம்பிக்கையையும் கட்சியினர் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். மாறாக 2014 தேர்தல் யுத்தத்தை எதிர்கொள்ள ஆயத்தமாவோம்" என்றார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்திருந்தாலும் அவற்றை மக்களிடம் சரியான முறையில் கொண்டு செல்லாததே 4 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம். மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சோனியா தெரிவித்தார்.

மக்களிடம், காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களை திறம்பட விளக்க வேண்டும் என்று கட்சியினரிடம் அறிவுறுத்தினார்.

உணவு பாதுகாப்புச் சட்டம், நில அபகரிப்புச் சட்டம், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை எதிர்க்கும் சட்டம் போன்ற சட்டங்களை காங்கிரஸ் மக்கள் நலனுக்காக நிறைவேற்றியுள்ள போது எதிர்க்கட்சிகள் பிரதமர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில் மட்டுமே குறியாக இருந்ததாக தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் பிரிவினைவாத, வகுப்புவாதக் கொள்கைகளை பரப்பி வருவதாகவும் சோனியா குற்றம் சாட்டினார்.

பிரதமர் பேச்சு:

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியினர் ஒரு போதும் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். சில கட்சிகள் நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in