Last Updated : 26 Jan, 2017 04:47 PM

 

Published : 26 Jan 2017 04:47 PM
Last Updated : 26 Jan 2017 04:47 PM

கந்து வட்டி பிரச்சினை: கர்நாடகாவில் தலித் விவசாயி சுட்டுக்கொலை; குற்றவாளி கைது

கர்நாடகாவில் கந்து வட்டி பிரச்சினையில் தலித் விவசாயி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஆளுர் அருகே ஹலசூரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த குமார் (34) தனது மனைவி பிரமீளா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

தலித் சமூகத்தை சேர்ந்த இவர், அதே பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கந்து வட்டி பிரச்சினையில் ஆஷ்ரே (48) என்பவர் குமாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்தால் தலித் மக்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக குமாரின் அண்ணன் ஹனுமய்யா ஆளுர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், '' கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நான் (ஹனுமய்யா) ஆதிக்க சாதியை சேர்ந்த ஆஷ்ரேவிடம் ரூ. 25 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கினேன். கடந்த இரு ஆண்டுகளில் வட்டி மற்றும் அசலை சேர்த்து ரூ. 27 ஆயிரம் செலுத்தியுள்ளேன். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு எனது வீட்டுக்கு வந்த ஆஷ்ரே 25 ஆயிரம் ரூபாயையும், அதற்கு வட்டி ரூ. 15 ஆயிரத்தையும் சேர்த்து ரூ. 40 ஆயிரம் தர வேண்டும். இல்லாவிடில் நிலத்தை தனது பெயருக்கு எழுதி தர வேண்டும் என மிரட்டினார்.

அப்போது எனது தம்பி குமார் மற்றும் ஹலசூரு கிராம பெரியவர்கள் 8 பேர் ஆஷ்ரேவிடம் சமாதானம் பேசும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஆஷ்ரே கிராம பெரியவர்களின் பேச்சை ஏற்காமல், ரூ. 40 ஆயிரம் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லாவிடில் எனது நிலத்தை அவருக்கு எழுதித் தர வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.

இதற்கு எனது தம்பி குமார் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாக எச்சரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆஷ்ரே, எனது தம்பியை சாதிப் பெயரைச் சொல்லி திட்டி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில் எனது தம்பி குமார் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனால் ஆஷ்ரே மீது உரிய சட்டப்பிரிவில் கைது செய்து, தண்டனை பெற்று தர வேண்டும்''என கோரியிருந்தார்.

இந்நிலையில் ஹாசன் மாவட்ட தலித் அமைப்பினரும், ஹலசூரு கிராமத்தினரும் குமாரை சுட்டுக்கொன்ற ஆஷ்ரே-வை கைது செய்ய வேண்டும். மேலும் கொல்லப்பட்ட தலித் விவசாயின் குடும்பத்துக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினர்.

தலித் அமைப்பினரின் அழுத்தத்தின் காரணமாக ஆளுர் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதில் ஆஷ்ரே குமாரை சுட்டுக்கொன்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆஷ்ரே மீது இந்திய தண்டனை சட்டம் 302-ம் பிரிவு மற்றும் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தலித் விவசாயி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் ஹாசன் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x