கோவா முதல்வராக நாளை பதவியேற்கிறார் மனோகர் பாரிக்கர்

கோவா முதல்வராக நாளை பதவியேற்கிறார் மனோகர் பாரிக்கர்
Updated on
1 min read

கோவா மாநில முதல்வராக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மனோகர் பாரிக்கர் பதவியேற்றுக் கொள்கிறார். இதனை முன்னிட்டு தனது பாதுகாப்பு அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கோவா மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவை சந்தித்த மனோகர் பரிக்கர், தனக்கு மகாராஷ்டிரவாதி கோமந்தக், கோவா பார்வர்டு மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்ததற்கான ஆதாரங்களை ஒப்படைத்தார்.

இதனையடுத்து, ஆளுநர் மிருதுளா, ஆட்சியமைக்க பாரிக்கருக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, கோவா மாநில முதல்வராக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மனோகர் பாரிக்கர் பதவியேற்றுக் கொள்கிறார்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பாரிக்கருக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சுயேச்சைகள் ஆதரவோடு..

கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17, பாஜக 13 இடங்களைக் கைப்பற்றின. பெரும்பான்மையை நிரூபிக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் இரு கட்சிகளும் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டன.

மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி ஆகியவை தலா 3 தொகுதிகளைக் கைப்பற்றின. இவை தவிர 3 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் முதல்வராகப் பதவியேற்றால் ஆதரவு அளிக்கத் தயார் என்று மகாராஷ்டிரவாதி கோமந்தக், கோவா பார்வர்டு மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த எம்எல்ஏ சர்ச்சிலும் பாஜகவுக்கு ஆதரவு அளித்தார்.

இந்நிலையில் பாஜக புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் பனாஜியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் மனோகர் பாரிக்கரை கட்சி யின் சட்டப்பேரவைத் தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர் நேற்று மாலை கோவா மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in