

பல அடுக்கு பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை நேற்று முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. 2,280 பேர் அடங்கிய முதல் குழுவினர் அமர்நாத் குகை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.
ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத் துறை இணையமைச்சர் பிரியா சேத்தி, துணை முதல்வர் டாக்டர் நிர்மல் சிங் இருவரும் அமர்நாத் யாத்திரையை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஜம்முவில் பகவதி நகர் யாத்ரீ்கர்கள் நிலையத்தில் இருந்து காலை 5.30 மணிக்கு 72 வாகனங்களில் முதல் குழுவினர் உற்சாகத்துடன் “ஜெய் போலே நாத், பம் பம் போலே” என முழக்கங்கள் எழுப்பியவாறு புறப்பட்டுச் சென்றனர்.
அமர்நாத் யாத்திரைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும் பக்தர்கள், போலீஸ் அதிகாரிகள் என 250 பேரை கொல்ல தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும் உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யாத்திரை வழித்தடம் முழுவதும் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஜாமர் கருவிகள், குண்டு துளைக்காத பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. வழி நெடுக ரகசிய கேமராக்களும் நிறுவப்பட்டு, மோப்ப நாய்கள் மூலமாகவும் கண்காணிக்கப் படுகிறது. ஆயிரத்துக்கும் மேற் பட்ட பாதுகாப்புப் படையினருடன், அதிவிரைவு படையினரும் வழிநெடுக பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
பனி லிங்க தரிசனத்துக்காக புறப்பட்ட முதல் குழுவில் 1,811 ஆண்கள், 422 பெண்கள், 47 சாதுக்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நிருபர்களிடம் தெரிவித்த காஷ்மீர் துணை முதல்வர் டாக்டர் நிர்மல் சிங், ‘‘அமர்நாத் யாத்திரைக்கு இடையூறு ஏற்படாத வகையில் உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலை பயணத்தின்போதும் அடிவார முகாம்களிலும் கூட பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’’ என்றார்.
போலீஸ், ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் படை என மொத்தம் 40 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக் கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர மாநில அரசுக்கு உதவி செய்வதற்காக 250 கம்பெனிகள் (25,000 வீரர்கள்) கொண்ட துணை ராணுவத்தினரையும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இதில் எல்லை பாதுகாப்புப் படை தரப்பில் 2,000 வீரர்களும், ராணுவம் தரப்பில் 5,000 வீரர்களும், போலீஸ் தரப்பில் 5,400 பேரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். வழக்க மாக 48 நாட்கள் நடக்கும் அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு 40 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி (ரக்ஷா பந்தன்) யாத்திரை முடிவுக்கு வருகிறது.