

கேரள மாநிலத்தின் வெஸ்ட் ஹில் சார் பதிவாளர் அலுவலகம் வியாழக்கிழமை விழாக்கோலம் பூண்டிருந்தது.
ஏ.எஸ் ராதாகிருஷ்ண பிள்ளை மணக்கோலத்தில் ஜொலித்தபடி சக நண்பர்களின் கேள்விகளுக்கு வேடிக்கையாகப் பதிலளித்துக் கொண்டிருந்தார். மணப்பெண் ராதாவுக்கு இன்னும் பிரமிப்பு விலகியபாடில்லை.
“நாங்கள் தங்குவதற்கு மயநாட்டில் வாடகை வீடு ஏற்பாடு செய்துவிட்டேன். இன்றே அங்கு கிளம்புகிறோம். எனக்கு கண் நன்றாகத் தெரிகிறது. இரவில் வெகு நேரம் விழித்துப் படிப்பதால் தான் இக்கண்ணாடியை அணிந்திருக்கிறேன்” என மணவிழாவுக்கு வந்திருந் தவர்களிடம் வெகு சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார் ஏ.எஸ்.ராதாகிருஷ்ண பிள்ளை.
மாப்பிள்ளைக்கு வயது அதிகமில்லை. சதமடிக்க இன்னும் 10 ஆண்டுகள்தான் பாக்கி. மண மகளும் 60-ஐக் கடந்தவர்தான்.
இந்தத் தகவல்கள் படிப்பவர் களுக்கு ஆச்சரியமளிக்கக் கூடும். ஆனால், திருமணத்தின் பின்னணி, மாப்பிள்ளையைப் பொருத்தவரை மிகவும் கொள்கைப்பிடிப்புக்கானது.
ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் வயநாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர். கதராடையில் மணக் கோலம் கண்டிருக்கிறார்.
ராதாவுக்கு தன்னைவிட 30 வயது மூத்த புதியதோர் உறவு கிடைத்திருக்கிறது. 5 பேர் கொண்ட குடும்பத்தில் மூத்தவராகப் பிறந்தவர் ராதா. தங்கைகளுக்கு திருமணமாகிவிட்டது. பெற்றோர் இயற்கையெய்தி பின்னர் தனி மரமாகவே இருந்தார் ராதா. ராதாகிருஷ்ணனின் மூத்த மனைவி இறந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. நண்பர்கள் மூலம் இந்தத் திருமண பந்தம் ஏற்பட்டதாம். “நான் அங்கன்வாடி உதவியாளராகப் பணி யாற்றினேன். ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஓய்வூதியம் வருகிறது. அவரின் மறைவுக்குப் பின், ஏழைப் பெண் ஒருவருக்கு அந்தத் தொகை கிடைக்க வேண்டும் என விரும்பினார். சட்டரீதியான நடைமுறைகளுக்காக இத்திருமணம் நடைபெற்றது” என்றார் ராதா.
ராதாகிருஷ்ணனின் முதல் மனைவிக்குப் பிறந்த 5 வாரிசுகளும் திருமணத்துக்கு வரவில்லை.
திருமண பந்தம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்படக்கூடும். அது ஒரு ஏழைப் பெண்ணுக்கு உதவுவதற்காகக் கூட இருக்கலாம்.