Last Updated : 03 Oct, 2014 12:46 PM

 

Published : 03 Oct 2014 12:46 PM
Last Updated : 03 Oct 2014 12:46 PM

பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சார சீர்கேடா?- ஜேசுதாஸ் பேச்சால் சர்ச்சை

"ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை

நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை..."

இப்படி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய பாடலைப் பாடிய ஜேசுதாஸ்தான் தற்போது பெண்கள் உடை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

பெண்கள் ஜீன்ஸ் உடை அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என பாடகர் ஜேசுதாஸ் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கேரள மாநிலத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியபோது ஜேசுதாஸ் இவ்வாறு பேசியுள்ளார்.

ஜேசுதாஸ் அதோடு மட்டும் நிறுத்தியிருந்தால் பெண்கள் அவருக்கு எதிராக கொதித்தெழுந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவரது முழுப் பேச்சையும் இங்கே பதிவு செய்வது அவசியமாகிறது.

விழாவில் ஜேசுதாஸ் பேசியதாவது: "பெண்கள் ஆண்களைப் போல் இருக்க முயற்சிக்கக் கூடாது. பெண்களின் அழகு அவர்கள் எளிமையில் இருக்கிறது. ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து மற்றவருக்கு பெண்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. எதை மறைக்க வேண்டுமோ அதை மறைப்பது அவசியம். பெண்கள், தங்கள் உடையலங்காரத்தால் ஆண்களை தேவையில்லாத செய்கைகளில் ஈடுபடத் தூண்டக் கூடாது. ஆண்களை ஈர்க்கும் வகையில் உடைகளை அணியக் கூடாது. ஜீன்ஸ் அணியும் பெண்ணைப் பார்க்கும் ஓர் ஆண் ஆடைக்குள் ஒளிந்திருக்கும் பெண்ணின் அங்கங்களையும் பார்க்கத் தூண்டப்படுகிறான். ஜீன்ஸ் - இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான உடை" என்றார்.

திருவனந்தபுரத்தில் உள்ள இசைக்கல்லூரியில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனோர் இளம் பெண்கள். சுத்தமான கேரளம், சுந்தர கேரளம் என்ற திட்டத்தை துவக்கி வைத்தபோது ஜேசுதாஸ் இப்படிப் பேசியுள்ளார்.

ஜேசுதாஸின் கருத்துக்குகு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பெண்கள் காங்கிரஸார், திருவனந்தபுரத்தில் கண்டனப் பேரணியும் நடத்தியுள்ளனர். இது குறித்து கேரள மகளிர் காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்: "ஜேசுதாஸின் பேச்சு பெண்களின் சுதந்திரத்தை அத்துமீறுவதாகும். ஒரு மிகப் பெரிய இசைக் கலைஞரான ஜேசுதாஸ் இவ்வாறு பேசியிருப்பது துரதிர்ஷ்டவசமானது" என்றார்.

"சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்.

தூரத்து தேசத்தில் பாரதப் பெண்மையின் பாடல் கேட்க வேண்டும்.

பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடம் சொன்ன சித்தர்களும்

ஈன்ற தாயும் பெண்மை என்று எண்ணிடாத பித்தர்களே.

ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்"

என்ற வரிகளை உருகி உருகிப் பாடிய ஜேசுதாஸ், பெண்களுக்கு எதிரான அவரது பாலின கருத்தை திரும்பப்பெறுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x