

போதை கடத்தல் கும்பல் மீதான நடவடிக்கை உள்ளிட்ட கடமைகளைச் செய்ய மறுக்கும் காவல் துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்; டெல்லி அரசின் கீழ் போலீஸ் துறையைக் கொண்டு வர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் கேஜ்ரிவாலும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஆம் ஆத்மி தொண்டர்களுடன் தர்ணாவை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.
தர்ணா வளாகத்திலேயே தனது அலுவலகப் பணி; வீதியிலேயே மெத்தையில் படுக்கை; காலையில் மீண்டும் தர்ணா; 'இப்போராட்டம் காலவரையன்றி செல்லும்' என எச்சரிக்கை; வீதியிலேயே மாநில அமைச்சரவைக் கூட்டம்...
தன்னை 'அரசின்மைவாதி' (Anarchist) என்று எதிர்கட்சிகளை நோக்கி முழக்கமிடும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், குடியரசு தின விழா நடைபெற உள்ள ராஜ்பாத் நோக்கி ஒரு லட்சம் ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மேற்கொண்டுள்ள இந்த 'தர்ணா அணுகுமுறை', இந்திய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
எந்த ஒரு மாநில முதல்வரும் இத்தகைய அணுகுமுறையை நாடியதாக இந்திய வரலாற்றில் குறிப்பு இல்லை என்று சமூக வலைத்தளங்களில் அரவிந்த் கேஜ்ரிவாலை நையாண்டி செய்தும், 'புது முயற்சி'க்குப் புகழாரம் சூட்டியும் நொடிக்கு நூறு ட்வீட்களையும், ஸ்டேட்டஸ்களையும் தட்டி விடுகின்றனர்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் அணுகுமுறையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்.
விவாதிப்போம் வாருங்கள்.