மனிதக் கேடயமாக என்னைப் பயன்படுத்தி 28 கிமீ இழுத்துச் சென்றதுதான் வீரமா? - பரூக் அகமது தார் கேள்வி

மனிதக் கேடயமாக என்னைப் பயன்படுத்தி 28 கிமீ இழுத்துச் சென்றதுதான் வீரமா? -  பரூக் அகமது தார் கேள்வி
Updated on
2 min read

கடந்த ஏப்ரல் 9-ம் தேதியன்று ராணுவ மேஜர் லீத்துல் கோகய்யின் ஆணைக்கு இணங்க எம்பிராய்டரி கலைஞர் ஃபரூக் அகமது தார் என்பவரை ராணுவ ஜீப்பில் முன்னால் கட்டி 28 கிமீ வரை இழுத்து சென்று கல் வீச்சுக்கு எதிராக மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டது கடும் மனிதார்த்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த மாதம் நடந்த இடைத்தேர்தலைப் பிரிவினை வாதிகள், தீவிரவாதிகள் புறக்கணிக்குமாறு எச்சரித்தனர், ஆனால் எச்சரிக்கையையும் மீறி தான் வாக்களித்து விட்டு வந்த போது ராணுவம் தன்னைப் பிடித்து ராணுவ வாகனத்தின் முன் பகுதியில் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி 28 கிமீ அழைத்து சென்றதாக பரூக் தெரிவித்தார்.

இதன் வீடியோ வைரலானது, இதனையடுத்து பொதுமக்கள் ஆவேசமடைந்தனர், பலதரப்புகளிலிருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அதாவது ராணுவ வீரர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்துபவர்களிலிருந்து தற்காத்துக் கொள்ள ராணுவம் இத்தகைய செயலைச் செய்துள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில், “ஒரு மனிதனை 28 கிமீ மனிதக் கேடயமாக இழுத்துச் செல்வதுதான் ராணுவ வீரமா?” என்று பாதிக்கப்பட்ட பரூக் அகமது தார் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது குறித்து காஷ்மீர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது, ராணுவமும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட பரூக் அகமது தார், “விசாரணை என்பதெல்லாம் வெறும் கண் துடைப்பு. அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை, நான் யார் ஒரு சாதாரண ஆள், எனக்கு ஏன் அவர்கள் விசனப்பட வேண்டும்?

மேலும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது, இன்று வரை போலீஸ் என்னை அழைக்கவில்லை. என்னுடைய புகாரையே முதலில் பதிவு செய்யவில்லை” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்நிலையில் ராணுவ மேஜருக்கு இதற்காக விருது வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய பரூக் அகமது தார், “28 கிமீ ஒரு மனிதனை கேடயமாக ஜீப்பில் கட்டி இழுத்துச் செல்வதுதான் ராணுவ வீரமா? அல்லது போராட்டத்துக்கு எதிரான நடவடிக்கையாகுமா? நான் மிரட்டலுக்கு அடிபணியாமல் ஒரு குடிமகனாக வாக்களித்தேன் அதற்கு எனக்குக் கிடைத்த தண்டனையே இது. எங்கு சென்றாலும் இதனால் என் மீது தற்போது பார்வைகள் விழுகிறது. மத்திய மாநில அரசுகள் உண்மையை புதைக்கப் பார்க்கின்றனர்.

ராணுவ மேஜர் வாதம்:

இந்தச் சம்பவத்துக்குக் காரணமான ராணுவ மேஜர் கோகய் கூறும்போது, “வாக்குச்சாவடிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கச் சென்று கொண்டிருந்தோம். அங்கு எங்கள் மீது கல்லெறி சம்பவம் நடந்த்து. பிறகு பெட்ரோல் குண்டுகளையும் எங்கள் மீது வீசினர். அதனால் உள்ளூர் மக்களைக் காப்பாற்றவே இந்த முறையைக் கடைபிடித்தோம்” என்று நியாயப்படுத்தினார்.

முன்னாள் ராணுவ ஜெனரல்களில் சிலரும் இந்த மனிதக் கேடய விவகாரத்தை விமர்சனம் செய்துள்ளனர், இந்திய ராணுவத்தின் பண்பாடுக்கு எதிரான செயல் என்று கண்டித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in