Last Updated : 10 Jul, 2016 12:51 PM

 

Published : 10 Jul 2016 12:51 PM
Last Updated : 10 Jul 2016 12:51 PM

ஊழல் புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற அதிகாரிகள்: டெல்லியில் கேஜ்ரிவால் அரசு திட்டம்

டெல்லியில் அர்விந்த் கேஜ்ரி வால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கடந்த 2015-ல் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் டெல்லியை ஊழலற்ற மாநிலமாக மாற்றுவ தாக உறுதி அளித்திருந்தது.

இதை அமல்படுத்தும் வகையில் மாநில அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்களை தீர விசாரித்து, மீண்டும் நடைபெறா மல் தடுக்க முயற்சித்து வருகி றது. இதையொட்டி துறை ரீதி யான ஊழல் விசாரணையில் சிக்குவோரை விசாரிக்க ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை நியமிக்க கேஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோரின் தகுதியும் வரையறுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும் போது, “மத்திய, மாநில அரசு களில் துணை மற்றும் இணை இயக்குநர்களாகவும், செயலாளர் களாகவும் பணியாற்றிய வர்களாக இருத்தல் வேண்டும். தங்கள் பணிக்காலத்தில் எந்த ஊழலிலும் சிக்காதவராக இருக்க வேண்டும். இத்துடன் பொது வாழ்க்கையிலும் கிரிமினல் வழக்குகளில் சிக்காதவராக இருத்தல் வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படுவோரின் பணித்திறன் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளப் படும். இவர்கள் ஏப்ரல் 1-ம் தேதியன்று 65 வயதுக்கு உட்பட்ட வராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுக்கப்படும் இந்த அதிகாரிகளுக்கான ஊதியம் அவர்கள் நடத்தும் விசாரணை அறிக்கைக்கு பின் அளிக்கப்படும். அதேசமயம் அவர்களின் அறிக்கையை டெல்லி அரசின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஏற்று இருக்க வேண்டும். அவர்கள் எக்காரணம் கொண்டும் தாங்கள் நடத்தும் விசாரணை பற்றி, விசாரணையின்போதோ அல்லது அதன் பிறகோ யாரிடமும் பேசக் கூடாது என தடை விதிக்கப் பட்டுள்ளது.

ஊழல் விசாரணையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை கேஜ்ரிவால் ஈடுபடுத்துவது இது முதல்முறையல்ல. இப்பணியில் கடந்த ஏப்ரலில், யூனியன் பிரதேச பிரிவில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சிலரை கேஜ்ரிவால் அமர்த்தினார். இவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விசாரணையை சிறப்பாக நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கீழ்நிலை அலுவலர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அல்லாத ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை பணியமர்த்த கேஜ்ரிவால் திட்டமிட்டு வருகிறார்.

டெல்லி அரசு அலுவலக குறைபாடுகள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை யார் வேண்டுமானாலும் அரசிடம் அளிக்கலாம். குறிப்பாக பொதுமக்களின் புகார்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேஜ்ரிவால் அரசு தனது ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x