

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டை ஒத்தி வைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹார் தலைமையிலான அமர்வு, "இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க எந்த முகாந்தரமும் இல்லை. இந்த மனு எப்போது விசாரணைக்கு குறிப்பிடப்படுகிறதோ அப்போது விசாரிப்போம்" எனத் தெரிவித்தது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ம் தேதி நிறைவடைய உள்ளது. முதல் நாளில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுவார். அதேநாளில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல் பகுதிக்குப் பிறகு மார்ச் 9-ல் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் தொடங்கி ஏப்ரல் 13-ல் நிறைவடையும் என்று தெரிகிறது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டை ஒத்தி வைக்குமாறு கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
மனுவை அவசர மனுவாக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் "இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க எந்த முகாந்தரமும் இல்லை. இந்த மனு எப்போது விசாரணைக்கு குறிப்பிடப்படுகிறதோ அப்போது விசாரிப்போம்" எனத் தெரிவித்தது.