

உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசில் காயத்ரி பிரஜாபதி போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார். தற்போது நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சித்ராகுட் பகுதியைச் சேர்ந்த பெண்ணை அமைச்சர் பிரஜாபதியும் அவரது கூட்டாளிகளும் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த பெண்ணை மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் உள்ளூர் போலீஸில் புகார் அளித்தார். அதனை போலீஸார் ஏற்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து அப்பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மகளையும் பாலியல் ரீதியாக அமைச்சர் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை நேற்றுமுன்தினம் விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு, அமைச்சர் பிரஜாபதி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் லக்னோ கவுதம்பள்ளி போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.