

ஏழை மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று அதிக அளவில் மீன்களைப் பிடித்து, வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வசதியாக பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டத்தை நேற்று அறிவித்தார்.
டாமன் மற்றும் டையூவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சிறிய கட்டுமரங்கள் வைத்திருப் பதால் ஆழ்கடலுக்குச் சென்று போதிய அளவுக்கு மீன் பிடிக்க முடியாமல் அல்லல்படும் ஏழை மீனவர்களுக்காக புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் புதிய வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வரைவு மசோதா அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும். ஏழை மீனவர்கள் தங்களது மீனவ கிராமங்களில் இதற்காக சிறிய குழுக்களை அமைக்கும்படி கேட்டுக் கொள்ளப் போகிறோம். அந்த குழுவுக்கு முத்ரா திட்டத்தின் அடிப்படையில் ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படும். அதற்கான 50 சதவீத நிதியை மத்திய அரசே வழங்கும்.
அந்த குழுவுக்கு மிகப் பெரிய மீன்பிடி படகுகள் வழங்கப்படும். அந்த படகுகள் அதிக மீன்கள் கிடைக்கும் பகுதி வரை, அதாவது 12 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு மிகாமல் செல்லும் திறன் கொண்டவையாக இருக்கும். எனவே தனியாகச் சென்று மீன்பிடிப்பதைத் தவிர்த்துவிட்டு, மீனவர்கள் இந்த குழுவில் இணைய வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை சரிசமமாக பிரித்துக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தை மேலும் மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் மத்திய அரசு வரவேற்கிறது. நாட்டின் கட லோர பகுதிகளில் வளர்ச்சியை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறோம். இதற்காக ரூ.8 லட்சம் கோடி முதலீட்டில் சாகர்மாலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தன்று டையூ மாநில மக்களிடையே உரையாற்றுவதை எனது அதிர்ஷ்ட மாக கருதுகிறேன். ஏனெனில் இங்கு தான் ஆண், பெண் பிறப்பு விகிதாச்சாரம் சரியாக இருக்கிறது. ஆயிரம் ஆண்களுக்கு, 1,040 பெண் கள் உள்ளனர். மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. ஆயிரம் சிறுவர்களுக்கு, 800 சிறுமிகள் என்ற விகிதத்தில் சமநிலை இல்லாத தன்மை நிலவுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்
சோம்நாத்தில் வழிபாடு
முன்னதாக, குஜராத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்குள்ள சோம்நாத் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். அப்போது பேசிய அவர், ‘‘இரு தினங்களுக்கு முன் காசிக்குச் சென்று காசி விஸ்வநாதரை வணங்கி, அவரது ஆசியை பெற்றேன். இன்று (நேற்று) சோமநாதரை தரிசித்துள்ளேன். அடுத்தடுத்து காசி விஸ்வநாதரையும், சோமநாதரையும் வழிபட வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன்’’ என்றார்.