

மத்தியபிரதேசத்தில் விவசாயி களைச் சமாதானப்படுத்தவும், அமைதியை ஏற்படுத்தவும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் 28 மணி நேரத்துக்குப் பின் நேற்று தனது போராட்டத்தை கைவிட்டார். பலியான விவசாயிகளின் குடும்பத் தார் கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதத்தை அவர் வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.
மத்தியபிரதேசத்தில் வேளாண் விளைபொருட்களுக்கு நியாய மான விலை வழங்கக் கோரி கடந்த 1-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மான்ட்சார் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் அம்மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதையடுத்து விவசாயிகளைச் சமாதானப்படுத்தி அமைதியை ஏற்படுத்த, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைநகர் போபாலில் உள்ள தசரா மைதானத்தில் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். தவறை மறைப்பதற்காக உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் சவுகான் நாடகம் நடத்தி வருவதாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில் போராட்டம் தொடங்கிய 28 மணி நேரத்துக்குப் பின், 2-வது நாளான நேற்று இளநீர் அருந்தி தனது போராட்டத்தை சவுகான் முடித்துக் கொண்டார். முன்னதாக பேசிய அவர், ‘‘மாநிலம் முழுவதும் அமைதி திரும்பிவிட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. எனவே எனது போராட்டத்தை முடித்துக் கொள்கிறேன். மான்ட்சாரில் 5 விவசாயிகளின் உயிரைப் பறித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவ சாயிகளின் பிற கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்’’ என்றார். பலி யான விவசாயிகளின் குடும்பத் தாரும் போராட்டத்தை கைவிடும் படி அவரை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
சிந்தியா ஆறுதல்
சிவராஜ் சிங் சவுகானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, வரும் 14-ம் தேதி முதல் 72 மணி நேர சத்தியாகிரகப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் மான்ட்சார் மாவட்டத்துக்கு சென்று துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதற்கிடையே துப்பாக்கிச் சூடு நடந்த மான்ட்சாருக்கு செல்ல முயன்ற ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ், சமூக ஆர்வலர் மேத்தா பட்கர் மற்றும் சுவாமி அக்னிவேஷை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.