

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பாலை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவா நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜூடிசியல் மேஜிஸ்திரேட் ஷர்மா ஜோஷ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். நீதிமன்றத்தில் தருண் தேஜ்பாலை ஆஜர்படுத்திய கோவா குற்றப் பிரிவு பொலீஸ், அவரை 14 நாள் காவலில் வைத்து விசாரிக்கக் கோரியது.
முன்னதாக, பாலியல் புகாரில் சிக்கியுள்ள தெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பாலின் முன்ஜாமீன் மனுவை கோவா நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 7, 8-ம் தேதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தேஜ்பால், சக பெண் நிருபரை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோவா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நட்சத்திர ஓட்டலின் சிசிடிவி கேமராவில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வழக்கைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாக தலைமறைவாக இருந்த தேஜ்பால் வெள்ளிக்கிழமை கோவா போலீஸார் முன்னிலையில் ஆஜரானார்.