

மத வன்முறை தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டாட்சி கோட்பாட்டுக்கு எதிரானது என்பதால், மதவன்முறை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர நாடாளுமன்றத்துக்கு உரிமை இல்லை எனக் கூறி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, மத வன்முறை தடுப்பு மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்ற பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, சமாஜ்வாதி கட்சி, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து மதவாத தடுப்பு வன்முறை மசோதா தள்ளிவைக்கப்படுவதாக மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் தெரிவித்துள்ளார்.
அவையில் நடந்த விவாதம்...
அருண் ஜெட்லி (பாஜக): மதவன்முறை தடுப்பு மசோதா சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. இது கூட்டாட்சி கோட்பாட்டை அத்துமீறும் நடவடிக்கை ஆகும்.
கபில் சிபல்(சட்ட அமைச்சர்): மதவாத வன்முறை தடுப்பு மசோதாவை மிகக் கவனமாக வடிவமைத்துள்ளோம் மசோதாவின்படி மாநில அரசின் ஒப்புதலுடனேயே மத்திய அரசு எந்த ஒரு சட்ட நடவடிக்கை எடுக்கும். குஜராத் கலவரம் போன்று மாநில அரசு அங்கீகாரத்துடன் ஒரு மத வன்முறை நடைபெறும் போது, மத்திய அரசு தலையீட்டுக்கு இந்த சட்டம் உதவும். அத்தகைய சூழலிலும் கூட சம்பவம் குறித்து புலன்விசாரணை நடத்தும் அதிகாரம் மாநில அரசு வசமே இருக்கும்.
அருண் ஜெட்லி: மத்திய அரசுக்கு இந்த சட்டத்தை கொண்டு வர எந்த அதிகாரமும் இல்லை. இதை பாஜக போல் மற்ற கட்சிகளும் எதிர்த்துள்ளது வரவேற்கத்தக்கது.
சீதாராம் யெச்சூரி ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): மத்திய அரசுக்கு மத வன்முறை தடுப்பு மசோதாவை தாக்கல் செய்வதற்கு அதிகாரம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கும் போது, மசோதா மீது விவாதம் நடத்துவது என்பது அரசியலமைப்பை மீறுவதே ஆகும்.
டெரக் ஓ பிரெயின்(திரிணாமூல்): ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து விட்டது. மாநில அரசுகளின் உரிமைகளை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது.
மைத்ரேயன்(அதிமுக): பல்வேறு மாநில முதல்வர்களும் மதவன்முறை தடுப்பு மசோதாவின் பல்வேறு பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கூட மத்திய அரசு அதில் திருத்தம் செய்யவில்லை. சட்டம் ஒழுங்கு மாநில அரசு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டியது. எனவே இந்த மசோதாவை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு மாநிலங்களவையில் பாஜக தலைவர் அருண் ஜெட்லி, சட்ட அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் விவாதத்தில் ஈடுபட்டனர்.