

சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) தொடர்பான இணைப்பு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன.
மக்களவையில் சி-ஜிஎஸ்டி, ஐ-ஜிஎஸ்டி, யுடி-ஜிஎஸ்டி மற்றும் இழப்பீடு சட்டங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பான விவாதங்கள் நாளைக்குள் எடுத்துக் கொள்ளப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஜிஎஸ்டி வரியின் கீழ் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான மசோதாக்கள், பல்வேறு செஸ் வரிகளை ரத்து செய்வதற்காக கலால் மற்றும் சுங்க வரியில் திருத்தங்கள் செய்யப்பட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
இந்த மசோதாக்கள் மீது விவாதம் நடத்துவது குறித்து மக்களவை அலுவல் குழு இன்று கூறி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 30-ம் தேதிக் குள் ஜிஎஸ்டி மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மக்களவையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின், மாநிலங்களவையின் ஒப்புத லுக்காக அனுப்பி வைக்கப்படும்.
அதேசமயம் நிதி மசோதா வடிவில் இந்த மசோதாக்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசு விரும்புகிறது. அப்படி செய்யும் போது மாநிலங்களவையில் சுட் டிக்காட்டப்படும் திருத்தங்களை ஏற்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்காது. இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்குள் ஜிஎஸ்டி மசோதாவை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்காகவே இம் மசோதாக்களை நிறைவேற்ற மும் முரம் காட்டி வருகிறது. தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஏப்ரல் 12-ம் தேதி நிறைவடைகிறது.