2018-ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.10,000 கோடி: ஜேட்லி அறிவிப்பு

2018-ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.10,000 கோடி: ஜேட்லி அறிவிப்பு
Updated on
1 min read

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 10,000 கோடியை அரசு அடுத்த நிதியாண்டில் அளிக்கும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அப்போது அவர், "இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ், அடுத்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 10,000 கோடி வழங்கப்படும். அதேசமயம் வங்கிகளுக்கு தேவைப்பட்டால் அரசு கூடுதல் நிதி ஒதுக்கவும் தயங்காது என்றார்.

2015-ம் ஆண்டு வங்கிகள் சீரமைப்புக்கு ரூ.70 ஆயிரம் கோடி தொகை, இந்திர தனுஷ் என்ற புதிய திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகையானது நான்கு ஆண்டு காலத்தில் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வங்கிகள் தங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரம் தேவைப்பட்டால் பேசல்-3 விதியை எட்டுவதற்கு வெளிச் சந்தையில் ரூ.1.10 லட்சம் கோடி வரை நிதி திரட்டிக் கொள்ளவும் அனுமதிக்கப்படும் என முந்தைய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திர தனுஷ் திட்டத்தின்படி கடந்த நிதி ஆண்டில் வங்கிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்தது. இது தவிர 2017-18 மற்றும் 2018-19-ம் நிதி ஆண்டில் தலா ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் 13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதியில், ரூ.22,915 கோடியை அரசு ஒதுக்கியது. இதில் 75 சதவீத நிதி ஏற்கெனவே வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுவிட்டது.

வங்கிகள் அளிக்கும் கடன் தொகையை அதிகரிக்கவும், சந்தையில் இருந்து அதிக பணப் புழக்கத்தை உற்பத்தி செய்ய ஏதுவாகவும் ஒவ்வொரு நிதியாண்டும், மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in