Published : 06 Jan 2014 09:48 AM
Last Updated : 06 Jan 2014 09:48 AM

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் கடந்து வந்த பாதை…

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து இதுவரை 7 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில், 4 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன. 3 தடவை ஏவப்பட்ட ராக்கெட்டுகள் தோல்வியடைந்தன.

இஸ்ரோ முதன்முதலாக 2001-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட்டை ஜிசாட்-1 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதையடுத்து 2003-ம் ஆண்டு மே 8-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-டி2 ராக்கெட், ஜிசாட்-2 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பின்னர், 2004-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-எப்01 ராக்கெட், எஜுசாட் (ஜிசாட்-3) செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

2007-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.- எப்04 ராக்கெட், இன்சாட்-4சிஆர் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இப்படி 4 முறை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட், 3 முறை தோல்வியடைந்தது.

2006-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-எப்02 ராக்கெட்டை, இன்சாட்-4சி செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதையடுத்து 2010-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட்டை, ஜிசாட்-4 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவ நடந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

பின்னர், 2010-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, ஜி.எஸ்.எல்.வி.-எப்06 ராக்கெட்டை, ஜிசாட்-5P என்ற செயற்கைக்கோளுடன் விண்ணில் அனுப்பும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

8-வது தடவையாக 2014-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி.-டி5 ராக்கெட், ஜிசாட்-14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திட்ட இயக்குநர் முனைவர் கே.சிவன், “கிரையோஜெனிக் இன்ஜினை ஆயிரம் நொடிகள் சரிவர பறக்கவைக்க ஆயிரம் நாட்கள் தேவைப்பட்டன. ஜிஎஸ்எல்வி என்ற விஷமக்கார சிறுவன் இன்று நம் சொல் பேச்சுக்கு அடி பணிந்துவிட்டான்” என்று மலர்ந்த முகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x