

ரூபாய் நோட்டு நடவடிக்கையில் மக்கள் அல்லல் படும் காலத்தில் ஆர்பிஐ கவர்னர் மவுனம் சாதிப்பது பற்றி ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்ப, அருண் ஜேட்லியோ உர்ஜித் படேலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
“உர்ஜித் படேல் மீது நியாயமற்ற தாக்குதல். இவர்களை போன்ற அதே தொனியில் தங்கள் தரப்பை எடுத்துக் கூற முடியாத நிலையில் உள்ளவர்களை அரசியல்வாதிகள் விமர்சனம் செய்துதான் ஆகவேண்டுமா?” என்று அருண் ஜேட்லி ட்வீட் செய்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எழுதிய கட்டுரையில், “உர்ஜித் படேல் நோட்டு நடவடிக்கைக்கு போதிய தயாரிப்பில் இல்லாமல் நாட்டை தவறான வழியில் கொண்டு சென்றதற்காக ஒன்று குற்ற உணர்வில் இருக்க வேண்டும் அல்லது ஆர்பிஐ-யின் தன்னாட்சி உரிமையை தியாகம் செய்திருக்க வேண்டும்.
இந்தியாவின் நிதி அதிகாரம் ஆர்பிஐ-யின் கையில்தான் உள்ளது, எனவே வங்கிகளில் போதிய அளவு நோட்டுகளை இருக்குமாறு செய்வது ஆர்பிஐ-யின் பொறுப்பாகும். பிரதமர் நோட்டு நடவடிக்கையை அறிவித்த அன்றே போதிய நோட்டுகள் உள்ளன, மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று உர்ஜித் படேல் எப்படி கூற முடிந்தது?
பிரதமரின் நோட்டு நடவடிக்கைக்கு உர்ஜித் படேல் தலைமை ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது என்றால் மக்களுக்கு போதிய நோட்டுகள் சென்றடையுமாறு பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் ஆர்பிஐ உடையதுதான்.
தற்போது போதிய நோட்டுகள் இல்லை என்கின்றனர். இதனால் இந்தப் பிரச்சினை சில மாதங்களுக்குச் செல்லாவிட்டாலும் சில வாரங்களுக்கு நீடிக்கவே செய்யும்.
இந்நிலையில் உர்ஜித் படேலின் மவுனம் ஆச்சரியத்தை அளிக்கிறது. மத்திய வங்கி தனித்துவமானது, தன்னாட்சி உடையது, எனவே இப்போதைய நிலையை அவர்கள் விளக்குவது கடமையாகும்.
நோட்டு நெருக்கடிக்கு ஆர்பிஐ மட்டுமே பொறுப்பாக இருக்கும் போது எந்த அடிப்படையில் நாட்டு மக்களுக்கு நிலைமைகளை விளக்காமல் அவர் இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து அருண் ஜேட்லி, உர்ஜித் படேல் சார்பாக கருத்து தெரிவித்துள்ளார்.