காலைக்கடனுக்காக திறந்தவெளியில் இருந்த பெண்களை படம் எடுப்பதை தடுத்ததால் முதியவர் கொலை: ராஜஸ்தானில் 4 நகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு

காலைக்கடனுக்காக திறந்தவெளியில் இருந்த பெண்களை படம் எடுப்பதை தடுத்ததால் முதியவர் கொலை: ராஜஸ்தானில் 4 நகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு
Updated on
1 min read

பெண்கள் காலைக்கடனுக்காக திறந்தவெளியில் இருந்தபோது நகராட்சி அதிகாரிகள் புகைப்படம் எடுத்தனர். அதை தடுத்த முதியவரை அவர்கள் கடுமையாக தாக்கினர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் நகரில் உள்ளது பக்வசா கச்சி பஸ்தி பகுதி. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு பெண்கள் சிலர் திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றனர். அந்த நேரத்தில் அந்தப் பக்கம் வந்த பிரதாப்கர் நகர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அவர்களைப் புகைப்படம் எடுத்தனர். இதனால் பெண்கள் அலறினர்.

சத்தம் கேட்டு அங்கு வந்த ஜாபர் கான் என்பவர் (55), அதிகாரிகள் புகைப்படம் எடுப்பதை தடுக்க முயற்சித்தார். புகைப்படம் எடுக்காதீர்கள் என்று துணிச்சலாகக் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த நகராட்சி அதிகாரிகள், ஜாபர் கானை கம்பால் கடுமையாக அடித்து உதைத்துள்ளனர். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி ஜாபர் கான் நேற்று இறந்துவிட்டார். ஆனால், இதயம் செயல்படாததால் ஜாபர் கான் இறந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. இதையடுத்து அவருடைய சகோதரர் நூர் முகமது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் நகராட்சி ஆணையர் அசோக் ஜெயின் உட்பட 4 அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதுகுறித்து பிரதாப்கர் போலீஸ் கண்காணிப்பாளர் ஷிவ்ராஜ் மீனா கூறும்போது, “இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

முதியவர் அடித்துக் கொல்லப் பட்டதை அடுத்து பிரதாப்கர் பகுதியில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் வலியுறுத்தியுள் ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in